\
zelensky
zelensky reuters

பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்.. புதிய பிரதமருக்கு அங்கீகாரம்.. அமைச்சரவையை மாற்றிய உக்ரைன் அதிபர்!

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் அரசியல் அதிகாரத்திற்கான ஒரு சோதனை அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, தனது அமைச்சரவையில் மேற்கொண்டு வரும் அதிரடி மாற்றங்களின் ஒரு பகுதியாகப் பாதுகாப்பு அமைச்சர் மைக்கலோ பெடோரோவை (Mykhailo Fedorov) பதவியில் இருந்து நீக்கியுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை உக்ரைன் அரசியல் மற்றும் ராணுவ வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோ நாடுகளில் இணையக்கூடாது என்பதற்காக உக்ரைன் மீது ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் போர் தொடுத்தது. அது இன்றுவரை நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் அரசியல் அதிகாரத்திற்கான ஒரு சோதனை அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 35 வயதான மைக்கலோ பெடோரோவ், கடந்த ஜனவரி மாதம் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, உக்ரைனின் டிஜிட்டல் உருமாற்ற அமைச்சராகப் (Digital Transformation Minister) பணியாற்றிய இவர், ரஷ்யாவுக்கு எதிரான போரில் ட்ரோன் (Drone) தொழில்நுட்பங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி உக்ரைன் ராணுவத்திற்குப் பெரும் பலம் சேர்த்தவர் என்று பாராட்டப்பட்டவர்.

இந்த நிலையில், மைக்கலோ பெடோரோவைப் பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெலென்ஸ்கி அவரது விலகலை முறையாக அறிவிக்கவில்லை. இருப்பினும், அவர் வெளியேறப் போகிறார் என்று பல நாட்களாக உறுதிப்படுத்தப்படாத உக்ரைனிய ஊடகச் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, ஃபெடோரோவ் சமூக ஊடகப் பதிவுகளில் தனது பதவிக்கால சாதனைகளைப் பட்டியலிட்டார்.

பெடோரோவுக்கும் உக்ரைன் ராணுவத் தலைமைத் தளபதி ஒலெக்சாண்டர் சிர்ஸ்கிக்கும் (Oleksandr Syrskyi) இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. நவீன ட்ரோன் தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்புத் துறை கொள்முதலில் பெடோரோவ் கொண்டுவந்த புதிய சீர்திருத்தங்களை, உக்ரைனின் பாரம்பரிய ராணுவத் தலைமை ஏற்க மறுத்ததாகவும், தனது திட்டங்கள் திட்டமிட்டு முடக்கப்பட்டதாகவும் பெடோரோவ் குற்றம்சாட்டியிருந்தார். பாதுகாப்புத் துறையில் ஊழலைக் குறைத்து, திறம்படச் செயல்பட்டதால் மக்கள் மத்தியில் பெடோரோவுக்குப் பிரபலம் அதிகரித்தது. இது அதிபர் ஜெலென்ஸ்கிக்கு எதிர்காலத்தில் அரசியல் ரீதியாகப் போட்டியாக மாறக்கூடும் என்ற அச்சமும் இருந்ததாலேயே, அவர் நீக்கப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

reuters

இதையடுத்து, மைக்கலோவுக்கு ஆதரவாக மக்கள் களத்தில் குதித்துள்ளனர். அரசாங்கத்தின் இந்த முடிவு, ரஷ்யாவுக்கு எதிரான போரில் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறி, பெடோரோவை மீண்டும் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விவகாரம் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் அடுத்தகட்டத்திற்குச் செல்லவும், அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்குப் புத்துயிர் ஊட்டவுமே இந்த அமைச்சரவை மாற்றம் அவசியம் என அவர் நியாயப்படுத்தியுள்ளார். இன்னொரு புறம், உக்ரைனின் புதிய பிரதமராக செர்ஹி கோரெட்ஸ்கியை நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. ஜெலென்ஸ்கி முன்னெடுத்த ஒரு பெரிய அரசாங்க மாற்றத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com