ரஷ்யாவுடன் ட்ரம்ப் செய்துகொண்ட எண்ணெய் ஒப்பந்தத்திற்குப் பிறகு, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் தீவிரமடைந்திருக்கிறது. இந்தநிலையில், ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைக் கொண்டு ரஷ்யாவின் பல நகரங்களில் உக்ரைன் நடத்திய தாக்குதல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
2022-ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், 4 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகின்றது. போர் தொடங்கியதில் இருந்து இரு நாடுகளும் தொடர்ந்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆரம்பத்தில் எல்லைப் பகுதிகள் மட்டுமே தாக்குதல்கள் நடைபெற்றது. ஆனால், தற்போது நீண்ட தூரம் பயணிக்கும் ட்ரோன்கள் மூலம், மின்நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எரிபொருள் கிடங்குகள் மற்றும் ராணுவத் தளங்களைக் குறிவைத்து இருநாடுகளும் தாக்கி வருகின்றன.
முன்னதாக, உக்ரைனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது ரஷ்ய அதிபர் புதினுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இம்மாத தொடக்கத்தில் ரஷ்யாவுடன் அமெரிக்கா எண்ணெய் ஒப்பந்தந்தத்தில் இணைந்தது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த உக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி, இந்த ஒப்பந்தம் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் புதினுக்கு அமெரிக்கா வழங்கிய ஒரு "நிதி உதவிப் பரிசு" (financial present) என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு, பதிலளித்த டிரம்ப், இருநாடுகளுக்கும் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர ஒரே முட்டுக்கடை ஜெலன்ஸ்கி தான் என விமர்சித்திருந்தார்.
இவ்வாறு, அமெரிக்காவுடனும் உக்ரைனுக்கு மோதல் போக்கு நிலவிவரும் இந்த நிலையில் தான், இன்று ஒரே இரவில் 1,000க்கும் மேற்பட்ட ட்ரோன்களைக் கொண்டு உக்ரைன் ரஷ்யாவின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்தத்தாக்குதல்களில், ஒருவர் கொல்லப்பட்டதுடன், 5 பேர் காயமடைந்திருக்கின்றனர். மேலும், ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் (Saint Petersburg) உள்ள எண்ணெய் முனையம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. அதேபோல, மற்றொரு எண்ணெய்க் கிடங்கும் தீப்பற்றி எரிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 1015 ட்ரோன்களை குறிவைத்து அளித்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, உக்ரைன் மீது நடத்திய பதிலடித் தாக்குதலில் அந்நாட்டின் தெற்குப் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்; மேலும், 6 வயது குழந்தை உட்பட 2 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ரஷ்யாவுடன் அமெரிக்கா செய்து கொண்ட எண்ணெய் ஒப்பந்தம் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதா என்ற கேள்வி சர்வதேச அளவில் எழுந்துள்ளது.