புதின், ஜெலன்ஸ்கி எக்ஸ் தளம்
உலகம்

1000 நாட்கள்! பற்றி எரியும் நெருப்பு.. உக்ரைன் - ரஷ்யா போர்.. இதுவரை நடந்தது என்ன? 20 முக்கிய Points

உக்ரைன் - ரஷ்யா போர் இன்றுடன் ஆயிரம் நாட்களைக் கடந்துள்ள நிலையில், இந்தப் போரில் இதுவரை நடந்தது என்பது குறித்துப் பார்ப்போம்.

Prakash J

1000 நாட்களைக் கடந்த உக்ரைன் - ரஷ்யா போர்

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கி வருவதாகச் செய்திகள் வெளியாகின. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இன்றுடன் (நவ.19) ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது.

இந்த தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசாங்கம், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ர‌ஷ்யாவினுள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த ரஷ்யாவும், உக்ரைனுக்கு எதிராக பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்த புடின் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் இருநாடுகளுக்கிடையேயான இந்தப் போர் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர்

இந்திய மாணவர்கள் வெளியேற்றம்;மருத்துவக் கல்வி பாதிப்பு

ஆயிரம் நாட்களைக் கடந்துள்ள இந்தப் போரில் இதுவரை நடந்தது என்பது குறித்துப் பார்ப்போம்.

* 2022, பிப்.24 போர் ஆரம்பமான பிறகு, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் மக்களை வெளியேற உத்தரவிட்டன. இதில், குறிப்பாக உக்ரைனுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்கள் அந்த நாட்டிலிருந்து பாதுகாப்பாக திரும்ப அழைத்துவரப்பட்டனர். அதேநேரத்தில், அவர்களுடைய கல்வி பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்களின் போராட்டத்திற்குப் பிறகு, உக்ரைன் மருத்துவ மாணவர்கள் இனி இந்தியாவில் படிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது.

* உக்ரைன் - ரஷ்யா போரால் தொடக்கத்திலேயே ஒரு லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்தனர்.

* உக்ரைன் மீது ரஷ்யா திடீரென போர் தொடுத்ததால், நேட்டோ நாடுகள் அதற்கு எதிராகக் களமிறங்கின. உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் நிதியுதவி அளிக்க முன்வந்தன.

* உக்ரைனில் 16-60 வயது வரையிலான ஆண்கள், போர் சூழலில் நாட்டைவிட்டு வெளியேறாமல் போர் புரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும், அவர்களுக்கு சம்பளமும் அதிகரிக்கப்பட்டது. அதில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் தன்னுடைய மகளையும் மனைவியையும் வழியனுப்பி வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.

* போர் காரணமாக ரஷ்யா மீது மேற்குலக நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன. இதன் காரணமாக, கச்சா எண்ணெய்யைக் குறைந்த விலைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ரஷ்யா வழங்கியது. மேலும், வைர ஏற்றுமதி நிறுவனம் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டது.

போர் நிறுத்தம் தொடர்பாக பிறநாடுகள் பேச்சுவார்த்தை

* போர் நிறுத்தம் தொடர்பாக, பிற நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஈடுபடவில்லை. மேலும், ரஷ்யாவுக்கு எதிரான ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ரஷ்யா, தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை முறியடித்தது. தவிர, ஐ.நா.சபையில் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்தின்போது இந்தியா யாருக்கும் வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது.

* உக்ரைன் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதலை, ’இனப்படுகொலை செய்கிறது’ என ரஷ்யா மீது அந்நாடு குற்றஞ்சாட்டியது. சர்வதேச நீதிமன்றத்திலும் முறையீடு செய்தது.

உக்ரைன் - ரஷ்யா

* உக்ரைன் போர் எதிரொலி காரணமாக, 2022 கத்தார் கால்பந்து உலகக் கோப்பையில் இருந்து ரஷ்யாவை FIFA அதிரடியாக நீக்கியது. அதேபோல், 2024 ஒலிம்பிக்கிலும் ரஷ்யா கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டது.

* உக்ரைனில் இரண்டு இந்திய மாணவர்கள் பலியாகினர். போர் காரணமாக 15 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேற்றம். தற்போது வரை, உக்ரைனுக்குள்ளேயே 40 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ள நிலையில் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளுக்குத் தப்பியுள்ளனர்.

* உக்ரைன் அணு உலை மற்றும் சில பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியதாகத் தகவல் வெளியானது. ரஷ்யா இப்போது உக்ரைனின் 5இல் 1 பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக ஆதாரமற்ற செய்தி வெளிட்டால் 15 ஆண்டு சிறை விதிக்கப்படும் என ஊடகங்களுக்கு புதின் எச்சரிக்கை விடுத்தார்.

”அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும்!”

* புதினை படுகொலை செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகின. இது ஒருபுறமிருக்க மறுபுறம், போரில் அதிக வீரர்களை இழந்த ரஷ்ய அரசாங்கம், அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு தம்பதியிரும் 8-10 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அதிபர் புதின் தெரிவித்தார். இதற்கிடையே அந்த நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவரே மீண்டும் வெற்றிபெற்றார்.

* உக்ரைன் போருக்கு இடையே, ரஷ்யா வளர்த்த வாக்னர் குழு எனும் கொடூரமான 25 ஆயிரம் பேர் கொண்ட கூலிப்படை, அந்நாட்டுக்கு எதிராக களமிறங்கியது. இந்தக் குழு ரஷ்யாவுக்கு எதிராக உள்நாட்டுப் போரைக் கையில் எடுத்தது. பின்னர், ரஷ்யாவும் பதிலடி கொடுக்க தயாரான நேரத்தில் இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது முடிவுக்கு வந்தனர். பின்னர், அந்தக் குழுவின் தலைவர் இறந்ததாக செய்திகள் வெளியாகின.

புதின்,

* போருக்கு இடையே இந்திய பிரதமர் மோடி, இரண்டு நாட்டு அதிபர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். போர் கூடாது எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். முன்னதாக, பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினைச் சந்தித்தபோது உக்ரைன் அதிபர் புதினை கடுமையாக விமர்சித்திருந்தார்.

* ரஷ்யாவுக்கு தனி ரயிலில் புறப்பட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். அந்த வகையில் வடகொரியாவுக்கு பொருளாதார ரீதியாக ரஷ்யா உதவுவதாகவும், அணு ஆயுதங்கள் வழங்குவதாக வடகொரியாவும் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு ஆதரவாக 12,000 வடகொரிய ராணுவ வீரர்கள் உக்ரைன் எல்லைக்கு அனுப்பப்பட்டனர்.

போரில் அதிக குழந்தைகள் பாதிப்பு

* இந்தப் போரில் இதுவரை குறைந்தது 545 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 1,156 குழந்தைகள் காயமடைந்திருப்பதாகவும் என யுனிசெஃப் அமைப்பு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வாரமும் குறைந்தது 16 குழந்தைகள் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தனது படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் சில பகுதிகளில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அனாதை இல்லங்களில் இருந்து ஆயிரக்கணக்கான உக்ரேனிய குழந்தைகளை வலுக்கட்டாயமாக நாடு கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

* 1000 நாட்களில், குறைந்தது 1,496 கல்வி நிறுவனங்கள், 662 சுகாதார வசதிகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தம் தொடர்பாக நம்பிக்கையுடன் பேசிய உக்ரைன் அதிபர்

* போர் தொடங்கியது முதல் இன்றுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மரணங்கள் மற்றும் காயமடைந்தோர்களின் எண்ணிக்கை அடக்கம். 80 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4 லட்சம் வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* பொதுமக்களில் 11 ஆயிரத்து 743 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 24 ஆயிரத்து 614 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் தீவிரமான காலகட்டங்களில் நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* அமெரிக்க அதிபர் தேர்தலில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதைத் தொடர்ந்து உக்ரைன் போர் முடிவுக்கு வரலாம் எனக் கூறப்படுகிறது. இதை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, ரஷ்ய அதிபர் புதின், அடுத்த அதிபராகப் பதவியேற்க உள்ள ட்ரம்புக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

* தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசாங்கம், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ர‌ஷ்யாவினுள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் பதிலுக்கு ரஷ்ய அதிபரும் உக்ரைனுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து போர் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.