அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள யூத அருங்காட்சியகம் அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர், பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும் என்று முழக்கமிட்டதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, கொலை நடந்த இடத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள அமெரிக்க புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஸாவின் தாக்குதலுக்கு பழிவாங்க அதனை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட இருவரும் திருமணம் செய்யவிருந்த இளம் ஜோடியென்று தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெறுப்பு மற்றும் தீவிரவாதத்திற்கு அமெரிக்காவில் இடமில்லை என்று கூறியுள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவில் இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் கொல்லப்பட்டது, யூத எதிர்ப்பு பயங்கரவாதம் என, இஸ்ரேல் தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கும் என நம்புவதாகவும் அந்நாடு கூறியுள்ளது.