2023ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் காசா இடையே தொடங்கிய போர் 2025 வரை நீடித்தது. இந்தப் போரில், 73 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் மற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உட்பட 76 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டால், எகிப்தில் கையெழுத்தானது. இதன்மூலம் இஸ்ரேல் காசா இடையேயான போர் முடிவுக்கு வந்திருக்கிறது.
எனினும், காசா மீது இஸ்ரேலின் தாக்குதல் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், காசா மீது கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வந்த போருக்கு எதிராக துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் (Recep Tayyip Erdoğan) தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததுடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இனப்படுகொலையில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டி வந்தார்.
இந்தச்சூழலில் தான், கடந்த மே-மாதம் துருக்கில் இருந்து காசாவுக்கு நிவாரணப்பொருட்களை கொண்டு சென்ற 50-க்கும் மேற்பட்ட கப்பல்களை தடுத்தி நிறுத்தி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம் 430 ஆர்வலர்களையும் கைது செய்திருந்தது. இதுதொடர்பான வழக்கு, துருக்கின் இஸ்தான்புல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய ராணுவ வீரர் அஃபெக் மோஸ்கோவிச் (Afek Moskovitch) மீது இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, இஸ்தான்புல் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக உள்நாட்டு அளவில் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் தான், நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய ராணுவ வீரர் அஃபெக் மோஸ்கோவிச் எதிராக துருக்கி அரசு சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதாக அந்நாடு நீதித்துறை அமைச்சர் அகின் குர்லெக் (Akın Gürlek) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இஸ்தான்புல் 11-வது உயர் குற்றவியல் நீதிமன்றத்தில் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அஃபெக் மொஸ்கோவிச் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூலை 14, 2026 அன்று பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டின் அடிப்படையில், 'இனப்படுகொலை' குற்றச்சாட்டின் கீழ் நெதன்யாகு மற்றும் மொஸ்கோவிச் ஆகியோரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்க இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை (Interpol Red Notice) விடுக்குமாறு உள்நாடு மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுக்குக் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல, காசாவில் இனப்படுகொலை நடத்தும் நெதன்யாகு அரசு சட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல என்றும், மனிதகுலத்திற்கு எதிராகக் குற்றம் புரிந்தவர்கள் கண்டிப்பாகச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் துருக்கி அரசு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
எனினும், துருக்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இஸ்ரேல் அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், துருக்கி அதிபர் எர்டோகன் ஒரு யூத-வெறுப்பு சர்வாதிகாரி எனவும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் ஒரே உண்மையான ஜனநாயக நாடான இஸ்ரேலின் தலைவர்களையும் வீரர்களையும் அச்சுறுத்த எர்டோகன் செய்யும் பரிதாபகரமான முயற்சி எங்குமே பலிக்காது” எனவும் தெரிவித்திருக்கிறது.