60 மணி நேர இடைவெளி.. ஆயுதங்களை இறக்கிய பாகிஸ்தான்.. ஆக்ஷனில் இறங்கப் போகும் இந்தியா?
எல்லை விவகாரம் தொடர்பாக, இந்தியா - பாகிஸ்தான் உறவு பல ஆண்டுகளாகவே மோசமடைந்துள்ளது. அதிலும், கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்குப் பதில் இந்த உறவு, மேலும் சிக்கலைச் சந்தித்துள்ளது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தி வெற்றிகண்டது. அதேநேரத்தில், பாகிஸ்தானுக்கு துருக்கியும் மறைமுகமாக உதவிசெய்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், சீனா மற்றும் துருக்கியில் இருந்து ராணுவக் கனரக வாகனங்கள் மூலம் பாகிஸ்தானுக்குப் பெருமளவில் போர்த் தளவாடங்கள் கொண்டு வரப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமார் 60 மணி நேர இடைவெளியில் சீனா மற்றும் துருக்கியைச் சேர்ந்த கனரக ராணுவப் போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தானுக்குத் தொடர்ச்சியாகப் பறந்துவந்து திரும்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ராவல்பிண்டிக்கு அருகில் உள்ள நூர் கான் (Nur Khan) விமானப்படைத் தளம் மற்றும் கராச்சியில் உள்ள மஸ்ரூர் (Masroor) விமானப்படைத் தளம் ஆகியவற்றில் இந்த விமானங்கள் அடுத்தடுத்து தரையிறங்கியுள்ளன. அதிலிருந்து, அதிநவீன ஆளில்லா விமானங்கள் (UAV/Drones), வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான உதிரி பாகங்கள் மற்றும் இதர ராணுவ வெடிமருந்துகள் கொண்டுவரப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் தனது முக்கிய இராணுவப் பங்காளிகளான சீனா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளுடனும் தனது பாதுகாப்பு உறவுகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வரும் வேளையில், இந்த நகர்வுகள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறுகிய காலத்தில் நடைபெற்ற இந்த வான்வழி விநியோகம் மற்றும் ராணுவப் போக்குவரத்து நகர்வுகளை இந்திய அரசு தீவிரமாய்க் கண்காணித்து வருகிறது.

