உலகின் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்று ரஷ்யாவில் இன்று அதிகாலை பதிவான நிலையில் அந்நாட்டிலும் ஜப்பானிலும் சுனாமி அலைகள் 12 அடி உயரத்திற்கு உயர்ந்தன. பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அலகில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடலிலும் பேரலைகள் எழுந்தன, இதனால் ரஷ்யாவின் கிழக்குப்பகுதி கடற்கரைகள் ஜப்பானின் வடக்குப்பகுதி கடற்கரைகள் பாதிக்கப்பட்டன. கடலோர கட்டடங்கள் சேதம் அடைந்த நிலையில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொலைபேசி சேவைகளும் பாதிக்கப்பட்டன. கார்கள் வெள்ள நீரில் சிக்கி படகுகள் போல அடித்துச்செல்லப்பட்டன.
எனினும் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் சுனாமி வந்ததை அடுத்து 9 லட்சம் பேர் இடம் மாற்றப்பட்டனர். பலர் வீடுகளின் மாடிகளில் தஞ்சமடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில், படகு போன்ற பொதுப்போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். அமெரிக்காவின் அலாஸ்கா, ஹவாய் ஆகிய பகுதிகளிலும் நியூசிலாந்திலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சாலைகளில் சைரன்கள் ஒலிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்கும் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள வாஷிங்டன் கலிஃபோர்னியா மாகாணங்களுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.