கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை நெருங்கும் இஸ்ரேல் - காசா போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் பலவும் ஒருசேர குரல்கொடுத்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 20 அம்ச அமைதி பரிந்துரைகளுக்கு ஹமாஸ் பதிலளிக்க மூன்று முதல் நான்கு நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். அப்படி பதிலளிக்கவில்லை என்றால் முடிவு மிக மோசமானதாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலால் இஸ்ரேலில் 1000திற்கும் மேற்பட்ட நபர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் - காசா போர் தொடங்கி நாளுக்கு நாள் திவீரமைடைந்து வருகின்றன. உக்ரைன் - ரஷ்யா போரை தொடர்ந்து இஸ்ரேல் - காசா போர், வட கொரியா - தென் கொரியா எல்லை பிரச்னை போன்றவை உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியது. இதனை தொடர்ந்து, வல்லரசு நாடுகள் தங்கள் ஆதரவு கரங்களை நீட்ட, நிலைமை மோசமானது.
மேலும், இந்த உலகளாவிய புவிசார் பதற்றம் உலகநாட்டு மக்களை பெரிதும் பாதித்தன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றையே இதற்கு உதாரணம்.
இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு வரி சதவிகிதத்தை உயர்த்தி அதிரடி காட்டினார். அதனை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் எல்லை பிரச்சனையில் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்ததாக தெரிவித்து வரும் ட்ரம்ப், இஸ்ரேல் - காசா போரையும் முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதன் நீட்சியாக 20 அம்ச அமைதி பரிந்துரைகளை அதிபர் டிரம்ப் வெளியிட்டிருக்கிறார்.
இப்பரிந்துரையில், போர் நிறுத்தம், ஹமாஸிடம் பிடிப்பட்டிருக்கும் பிணைக் கைதிகளை 72 மணி நேரத்திற்குள் விடுவித்தல், இஸ்ரேல் படிப்படியாக காசாவிலிருந்து வெளியேறுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
மேலும், வெள்ளை மாளிகையில் இது தொடர்பாக பேசிய டிரம்ப், "இன்னும் மூன்று நான்கு நாட்களுக்குள் ஹமாஸ் கையெழுத்திடவில்லை என்றால் முடிவு மிக மோசமானதாக இருக்கும் என்றும் அனைத்து இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகள் மட்டுமில்லாமல் இஸ்ரேலும் கையெழுத்திட்டுவிட்டனர். ஹமாஸுகாக தான் காத்திருக்கிறோம். ஹமாஸ் கையெழுத்திட போகிறதோ இல்லையோ.. ஆனால் கையெழுத்திடாமல் இருக்கும் பட்சத்தில் முடிவு மோசமாக இருக்கும்" என்று எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலின் தாக்குதலால் காசா நகரம் உருக்குலைந்துவிட்டது. 66000திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில் இனப்படுகொலை செய்யப்படுவதாக உலக நாடுகளின் கண்டன குரல்கள் வலுவாக எழுந்தது. அதனை தொடர்ந்து, டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒப்புக்கொண்ட நிலையில் ஹமாஸ் அமைதி காத்துவருவதும் டிரம்ப் எச்சரித்தும் கவனம் பெற்றுள்ளது.