trump and modi pt web
உலகம்

ட்ரம்பின் நடவடிக்கைகள் சீனாவுக்கே உதவும்.. எதிர்கால நோக்கில் கடுமையாக பாதிக்கப்போகும் அமெரிக்கா?

இந்தியாவின் மீதான டிரம்பின் நடவடிக்கைகள் தற்சமயத்தில் மட்டும் பயனளிக்கலாம். ஆனால், எதிர்கால நோக்கில் பார்த்தால் அமெரிக்காவுக்கே அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

Angeshwar G

யும்புவிசார் அரசியலின் விதிகளை அளவுக்கு அதிகமாகவும், வேகமாகவும் மாற்றி வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டம் அதற்கு ஒரு உதாரணம். உலகம் தீவிரமாக பிளவுபட்டிருப்பதை அக்கூட்டம் காட்டுவதாகத் தெரிவிக்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். இவையனைத்தையும் தாண்டி இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துவது இந்தியா மீதான அமெரிக்காவின் வரி தாக்குதல்கள்.

trump speech at uno

சமீபத்தில், இந்தியா அமெரிக்கா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது போன்ற தோற்றம் இருந்தாலும், பிளவு இன்னும் ஆழமாகிக் கொண்டே இருப்பதான பார்வையும் இருக்கிறது. இது கடந்த மூன்று தசாப்தங்களாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவை மேம்படுத்துவதற்காக இரு நாட்டு தலைவர்களும் மேற்கொண்ட இருதரப்பு முயற்சிகளை கேள்விக்கு உட்படுத்துகிறது. ஆனால், இந்த விலகலும், பிளவும் அமெரிக்காவையும் பாதிக்கும் என்பதுதான் முரண்.

இந்தியாவிற்கு எதிராக அவரது திட்டம் என்ன? நேற்று நடந்த ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், “ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும், தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இதன்மூலம், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு நிதியுதவி அளிக்கும் முதன்மையான நாடுகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளன. நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் கூட ரஷ்ய எரிபொருளை வாங்குவதை பெரிய அளவில் குறைக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், இந்தியா எதிர்கொள்ளுமளவுக்கு சீனா அமெரிக்காவிடமிருந்து சிக்கலை எதிர்கொள்கிறதா என்றால் இல்லை.

ட்ரம்ப், மோடி

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவுகளால் இந்தியா எந்த விதத்தில் எல்லாம் பாதித்திருக்கிறது என்று பார்த்தால் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது. உதாரணத்திற்கு, சில விஷயங்களைப் பார்க்கலாம். இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான விமானங்களை விமான நிறுவனங்கள் பெருமளவில் குறைத்திருக்கின்றன. இந்தியாவிற்கு எதிரான அமெரிக்காவின் தொடர்ச்சியான நிலைப்பாடுகளால், அமெரிக்காவுக்கு பயணிக்கும் பயணிகள் குறைவார்கள் என நினைத்த விமான நிறுவனங்கள் விமானங்களையே குறைத்திருக்கிறது. இதற்கிடையேதான் H1B விவகாரம் வேறு வந்திருக்கிறது. இதன்காரணமாக வரும் ஜனவரியில் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே பறக்கும் விமானங்களின் எண்ணிக்கை 27% வரை குறையலாம் என விமானத் தரவுகளை ஆய்வு செய்யும் Cirium நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு பயணம் செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வருவதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்தது வைர தொழில்.. ட்ரம்பின் கொள்கைகளால் இந்தியாவில் வெட்டப்பட்ட அல்லது மெருகூட்டப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இது தொடர்பாகதான் ரேட்டிங் ஏஜென்சியான Care Edge ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறது. மிகக்குறைவான லாபத்தில் இயங்கும் இந்தத்துறை மேலும் இழப்புகளை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Care Edge

அடுத்தது பாஸ்மதி அரிசி.. ஏற்கனவே ப்ரீமியம் வகையிலான பாஸ்மதி அரிசி சாதாரண அரிசியை விட இரண்டு மடங்கு அதிக விலையில் விற்கப்படுகின்றன. தற்போது வரி விவகாரம் வேறு.. இதனால், இதன் விலை அமெரிக்காவில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் பாஸ்மதி அரிசி ஏற்றுமதியில் 65% பங்கைக் கொண்டு இந்தியாவே முதலிடத்தில் இருக்கும் நிலையில், எஞ்சியது பாகிஸ்தானாக இருக்கிறது. ஆனால், இந்தியா 50% வரியை எதிர்கொள்ளும் அதேவேளையில், பாகிஸ்தான் 19% வரியை மட்டுமே எதிர்கொண்டிருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அரிசியின் ஏற்றுமதி அதிகரிப்பது இயல்பானதே.. இப்படி ஒவ்வொரு துறையிலும் இந்தியா சிக்கலைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறது.

இந்தியாவுக்கு மட்டும்தான் இந்த பிரச்னையா என்றால் இல்லை. இந்த விவகாரங்கள் இந்தியாவுக்கு குறுகிய கால வலியை ஏற்படுத்தும் அதேவேளையில் அமெரிக்காவுக்கு நீண்டகால நோக்கத்தில் மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தக்கூடும். அமெரிக்கா இந்தியாவுக்கு ஒரு முக்கிய சந்தையாகவும், முதலீடு மற்றும் தொழில்நுட்ப ஆதாரமாகவும் இருந்து வருகிறது. ட்ரம்பின் கொள்கைகள் இருதரப்பு உறவில் மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கும் அபாயம் இருக்கிறது. ஏனெனில் இரு தரப்பு உறவில் அதிகம் பயன்பெறுவது அமெரிக்கா என்ற பார்வையும் இருக்கிறது. இந்திய மாணவர்கள், தற்போது அமெரிக்காவில் மிகப்பெரிய வெளிநாட்டு மாணவர் குழுவாக இருக்கிறார்கள், ஆண்டுக்கு பில்லியன் டாலர்கள் அளவில் அமெரிக்க பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறார்கள்.

indians in america

அதே நேரத்தில், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் திறமையான இந்திய பணியாளர்களை சார்ந்துள்ளன. மிக முக்கியமாக, இந்தியாவின் விரிவடைந்து வரும் நடுத்தர வர்க நுகர்வோர் சந்தை, 2030க்குள் 8 கோடி மக்கள் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இச்சந்தையை இழப்பது நீண்ட கால நோக்கத்தில் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய இழப்பாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா மீதான ட்ரம்பின் நடவடிக்கைகள் அமெரிக்காவை சிறந்த நாடாக மாற்ற எதுவும் செய்யவில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்தியா மீதான அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த ட்ரம்ப் மேற்கொள்ளும் இந்த முயற்சிகள் எல்லாம் அமெரிக்காவின் முக்கிய புவிசார் அரசியல் போட்டியாளரான சீனாவிற்கே உதவும் என்கின்றனர் வல்லுநர்கள்.