அமெரிக்கா - ஈரான் போர் web
உலகம்

”ஈரானை ஒரே இரவில் அழித்து விட முடியும்” - ஹார்முஸை திறக்க ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

நான் வருத்தமாக இருக்கிறேன். அதற்காக அவர்கள் பெரிய விலையை கொடுக்கப் போகிறார்கள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Premkumar S

மத்திய கிழக்கில் அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் 5ஆவது வாரத்தை எட்டியுள்ளது. இந்தப் போர்ச் சூழலால் உலகளவில் எரிபொருள் தேவைக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்குக் காரணம், ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான். இந்தப் பாதை வழியாகத்தான் உலகின் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% போக்குவரத்து நடைபெறுகிறது. இந்தியாவின் 60% எரிவாயு (LPG) தேவை இந்த நீரிணை வழியாகவே இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாதையை சில நாடுகளுக்கே மட்டுமே ஈரான் திறந்துவிட்டுள்ளது. அதன் எதிரி நாட்டுக் கப்பல்கள் செல்ல அனுமதிக்கவில்லை.

ஹார்முஸ் - ட்ரம்ப்

இந்த சூழலில், ஹார்முஸை முழுவதுமாக திறக்க 10 நாட்கள் கெடுவிதிருந்தார். தொடர்ந்து, ஹார்முஸைத் திறக்கவில்லையென்றால் ஈரான் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். இதற்கிடையில், மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றைத்தைத் தணிக்கும் வகையில், 45 நாள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் ஹார்முஸ் திறப்பு உள்ளிட்ட திட்டங்கள் அடங்கிய ஒப்பந்தம் ஈரானிடம் கொடுக்கப்பட்ட நிலையில், ஈரான் அதனைத் நிராகரித்திருக்கிறது. மேலும், நிரந்த போர் நிறுத்தத்தையே ஈரான் விரும்புவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், ட்ரம்பின் கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஈரானுக்கான கெடுவை மேலும், 24 மணி நேரம் நீடித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், ”செவ்வாய்க்கிழமை (இன்று) ஈரானில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் ஒரே நேரத்தில் குறிவைக்கப்படும். இதற்கு முன்னெப்போதும் கண்டிராத ஒன்றாக இருக்கும். அந்த நீரிணையை (ஹார்முஸ்) திறந்துவிடுங்கள், இல்லையென்றால் நீங்கள் நரகத்தில் வாழ வேண்டியிருக்கும். பொறுத்திருந்து பாருங்கள்” தெரிவித்திருந்தார். மீண்டும் மீண்டும் கெடுவை ட்ரம்ப் நீடித்து வருவதை ஈரான் கிண்டல் செய்திருந்தது.

ட்ரம்ப்

முன்னதாக, ஈரானில் சிக்கிய 2 அமெரிக்க ராணுவ வீரர்களை அமெரிக்க பாதுகாப்புப் படையினர் மீட்டனர். இது குறித்து நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், இது மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு மீட்பு நடவடிக்கை எனத் தெரிவித்தார். தொடர்ந்து, ஈரானுக்கான கெடு குறித்துப் பேசிய அவர், ஒரே இரவில் முழு நாட்டையும் முடக்கிவிட முடியும், அந்த இரவு நாளை இரவாகக் கூட இருக்கலாம் எனவும் இந்த 24 மணி நேரக் கெடுவே இறுதியானது எனவும் தெரிவித்தார். அவர்கள் செய்ய வேண்டியதை செய்தால் போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் எனக் கூறிய அவர், நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். அதற்காக ஈரான் ஒரு பெரிய விலையைக் கொடுக்கப் போகிறது எனவும் தெரிவித்துள்ளார்.