வளைகுடாவில் தொடங்கிய போர், கடந்த ஜூன் 17-ம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தற்காலிமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, மூடப்பட்ட ஹார்முஸும் திறக்கப்பட்ட நிலையில், எண்ணெய் போக்குவரத்து மெல்ல சீராகி வந்தது. இதற்கிடையில் தான், போரின் முதல் நாளில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி காமேனியின் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. அவரது உடல் நாளை மஷ்ஹாத்தில் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. இவ்வாறு, மத்தியக் கிழக்கில் போர் மேகங்கள் சற்று தணிந்திருந்த நிலையில், ஹார்முஸ் வழியாக சென்ற மூன்று வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவம் ஈரான் மீது நேற்று சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை மையம் வெளியிட்ட தகவலின்படி, 80-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், வான் பாதுகாப்பு அமைப்புகள், கட்டளை மையங்கள், ஏவுகணை அமைப்புகள் உள்ளிட்டவை குறிவைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படைக்கு (IRGC) சொந்தமான 60-க்கும் மேற்பட்ட அதிவேக படகுகளும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, துருக்கியின் அங்காராவில் நடந்த நேட்டோ அமைப்பு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ட்ரம்ப், அங்கு பேசுகையில், "ஈரானுடன் இருந்த போர் நிறுத்தம் முடிந்துவிட்டது. இனி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை. அவர்களுடன் பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை" என்று தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, மத்தியக் கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது.
இந்தசூழலில் தான், நேட்டோ கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துள்ள ட்ரம்ப், இன்றிரவு ஈரானை கடுமையாகத் தாக்குவோம் எனத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாங்கள் நேற்றிரவு அவர்களை கடுமையாக தாக்கினோம். இன்றிரவும் அவர்களை கடுமையாக தாக்குவோம். இதை ஒரு சிறிய எச்சரிக்கையாகவே கூறுகிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் மீண்டும் தீவிரமடைகிறது.