Donald trump x page
உலகம்

ஈரான் போர் | அணு ஆய்வகத்திற்கு ரகசியமாக தூதர்களை அனுப்பிய ட்ரம்ப்!

ஈரான் யுரேனியக் கையிருப்பை எப்படி கையாளுவது என்பது குறித்து ஓக் ரிட்ஜு அணு ஆய்வகத்தில் டரம்ப் தூதர்கள் ரகசிய ஆலோசனை மேற்கொண்டனர்.

PT WEB

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதன் காரணமாக 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, போரை நிரந்தரமாக நிறுத்தும் பேச்சுவார்த்தையில் ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் பிரதான கோரிக்கையாக இருந்துவருகிறது. அதற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாததால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமலேயே இருந்து வந்ததாக கூறப்பட்டது.

Natanz Nuclear facility , iran

ஈரான், சுமார் 10,000 கிலோகிராம் அளவிலான மொத்த செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பைக் கொண்டுள்ளது. சர்வதேச அணுசக்தி முகமையின்படி, இதில் ஏறத்தாழ 440 கிலோகிராம் 60% வரை தூய்மையான உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியமும், சுமார் 184 கிலோகிராம் 20% தூய்மையான செறிவூட்டப்பட்ட யுரேனியமும் அடங்கும். இந்த யுரேனியம் இருப்பை மேலும் 90% தூய்மையாக செறிவூட்டுவதன் மூலம், பல அணு ஆயுதங்களை உருவாக்க முடியும்.

இதற்கிடையே ஏப்ரல் 8 முதல் இடைக்கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதும் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்தவாறே இருக்கிறது. இந்த தாக்குதல்களுக்கு மத்தியில் கடந்த வாரம் அதிபர் டொனால்டு ட்ரம்பின் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் டென்னசியில் (Tennesseee Oak Ridge) உள்ள ஓக் ரிட்ஜு அணு ஆய்வகத்துக்கு ரகசியமாக சென்றனர். ​​அவர்கள் ஈரானுடன் ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டால், ஈரானின் யுரேனியத்தை வைத்து உண்மையில் என்ன செய்வது என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

Oak ridge Lab

இந்த ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் யுரேனியச் செறிவூட்டல், அணுப் பொருட்கள் மேலாண்மை மற்றும் சரிபார்ப்பு அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் உள்ளனர்.

ஈரானுடன் முறையான அணுசக்திப் பேச்சுவார்த்தைகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாலும் பேச்சுவார்த்தைகள் மிகவும் தீவிரமான கட்டத்தில் உள்ளதாலும் தேசிய ஆய்வகத்தில் அணு விஞ்ஞானிகளையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் அவர்கள் சந்தித்தனர் என்று ஆக்சியோஸ் வெளியிட்ட தகவல்கள் கூறுகின்றன.

Oak ridge Lab

ஈரானுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MOU) எட்டுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் ஈரான் - அமெரிக்கா ஒப்பந்தம் கையெழுத்தானால் ஈரானிடம் தற்போதுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை அப்புறப்படுத்துவது, பாதுகாப்பது, கண்காணிப்பது அல்லது மாற்றுவது எதை செய்யப் போகிறது அமெரிக்கா என்பது குறித்து முடிவு செய்யவே டிரம்பின் தூதர்கள் அணு ஆய்வகத்திற்கு சென்றுள்ளனர். யுரேனியத்தை அகற்றுவதற்கான துல்லியமான வழிமுறைகளை அதாவது யுரேனியத்தை இடமாற்றம் செய்வது, நீர்த்துப்போகச் செய்வது, அணு உலை எரிபொருளாக செய்வது, ஈரானுக்குள் சர்வதேசப் பாதுகாப்புடன் சீல் வைத்து சேமிப்பது போன்ற 4 சாத்தியக் கூறுகளை அமெரிக்கா பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. டென்னசி பயணம், வாஷிங்டன் பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால் செயலாக்கத்தை நோக்கி சிந்திக்கத் தொடங்கியிருப்பதைக் காட்டுகிறது.