காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயரங்கவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, நேற்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
'ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த தாக்குதலில், பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. அதிகாலை 1:05 மணி முதல் அதிகாலை 1:30 மணி வரை நீடித்த இந்தத் தாக்குதலில், அதாவது 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகளை இந்திய ராணுவமும், விமானப் படையும் ஏவின. இந்த தாக்குதல் உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்த, உலக நாடுகளின் தலைவர்கள் முன்வைப்பது போர் பதற்றத்தை இரண்டு நாடுகளும் தணிக்க வேண்டும் என்றுதான்.
இந்தநிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய தாக்குதல் குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “ இந்த தாக்குதல் மிகவும் மோசமானது. இரு நாடுகளையும், அதன் தலைவர்களையும் எனக்கு நன்றாக தெரியும். இந்த போர் பதற்றத்தை இரு நாடுகளும் பேசி தீர்க்க வேண்டுமென நான் நிலைக்கிறேன். இரு நாடுகளும் சண்டையை நிறுத்த வேண்டுமென நான் நினைக்கிறேன். இப்போது இருநாடுகளும் சண்டையை நிறுத்தலாம். பழிக்குப்பழி நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே சண்டையை தடுக்க என்னால் ஏதேனும் செய்ய முடியுமென்றால் அதை செய்ய நான் தயாராக உள்ளேன் “ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்த பதிலளித்திருந்த டிரம்ப், "இரண்டு சக்திவாய்ந்த நாடுகள் இவ்வழியில் செல்வதை யாரும் பார்க்க விரும்பவில்லை. உலகிற்கு தேவை அமைதி , அதிக மோதல்கள் அல்ல . கடந்த காலத்தின் அடிப்படையில் ஏதோ நடக்கப் போகிறது என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். பல, பல தசாப்தங்களாக, நூற்றாண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர். இது மிக விரைவாக முடிவடையும் என்று நான் நம்புகிறேன்," என்று கூறியிருந்தார் .