ஜாரெட் குஷ்னர் Reuters
உலகம்

iPhone Hack? ட்ரம்பின் மருமகனுக்கு கைமாறிய ரூ.35,000 கோடி? வெளியான அதிர்ச்சித் தகவல்!!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்காவின் கணவர் ஜாரெட் குஷ்னர்.

Premkumar S

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மருமகனும், முன்னாள் வெள்ளை மாளிகை ஆலோசகருமான ஜாரெட் குஷ்னர் (Jared Kushner), சவுதி அரேபியாவிடம் இருந்து, 35 ஆயிரம் கோடி பணத்தை தனது வங்கி கணக்கிற்கு ரகசியமாக பறிமாற்றம் செய்துள்ளார் என நெதர்லாந்தைச் சேர்ந்த உளவு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த குற்றச்சாட்டுக்கு ஜாரெட் அளித்த விளக்கம் என்ன? பார்க்கலாம்..

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்காவின் கணவர் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner). இவர், அமெரிக்காவின் தற்காலிக சமாதான பேச்சுவார்த்தை குழுக்களில் தற்போது இடம்பெற்றுள்ளார்.

Princes and Thieves

இந்தச்சூழலில் தான், அவர்குறித்து அமெரிக்காவின் புலனாய்வு செய்தியாளர் மேத்யூ கோல், எழுதியிருக்கும் ’Princes and Thieves : ஜாரெட் குஷ்னர் மற்றும் முகமது பின் சயீதின் மத்திய கிழக்கை மறுவடிமைப்பதற்கான ரகசிய சதித்திட்டம்’ என்ற புத்தகம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதற்கான, முன்னோட்டமாக வேனிட்டி ஃபேர் (Fanity Fair) என்ற இதழில், ஒரு கட்டுரை நேற்று வெளியானது. அதில், தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் தான் தற்போது உலகளவில் கவனம் பெற்றுள்ளன.

அந்தக் கட்டுரையின்படி, நெதர்லாந்தைச் சேர்ந்த உளவு அமைப்பு ஒன்று ஜாரெட் குஷ்னரின் ஐபோன்-ஐ ஹேக் செய்ததாகவும், அந்தத் தகவல்களில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பாக, அமீரக அரசுடன் தொடர்புடைய அறக்கட்டளையின் பெயரில் இருந்த வங்கிக் கணக்கில் சுமார், 7000 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டதாகவும், அந்தக் கணக்கு அவர் பெயரில் இல்லை எனினும், அந்தக் கணக்கை அணுகும் அதிகாரம் குஷ்னருக்கு இருந்ததாகவும் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாரெட் குஷ்னர்

மேலும், சவுதி மற்றும் அமீரகத் தலைவர்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி அமைப்புகள் மூலம், 18 ஆயிரம் கோடி மதிப்பிலான தொகை 2 வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாகவும், குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் செல்வாக்கு செலுத்துவதற்கான முயற்சிகளுடன், இந்த நடைபெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஜாரெட் குஷ்னர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்ற கற்பனைகள் என்றும், வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள் உள்ளிட்ட சரிபார்க்கக்கூடிய ஆதாரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவை புலனாய்வு இதழியல் என்று கூறப்படும் அப்பட்டமான புனைவுகள் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தச்சூழலில் தான், ட்ரம்பின் மருமகனுக்கு 35 ஆயிரம் கோடி ரகசிய பணப்பறிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியிருக்கிறது.