ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலால் நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் உயிரிழந்தனர். பதிலடிகொடுத்த ஈரான் வளைகுடா தளங்களைத் தாக்கி ஹார்முஸ் நீரிணையை மூடியது. பாகிஸ்தான் முயற்சியால் அமைதி ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று கையெழுத்தாகும் ஒப்பந்தத்துடன் ஹார்முஸ் நீரிணை திறக்கப்படும் என்றும், ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைக்காது என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையே பல ஆண்டுகளாக பதற்றம் நிலவி வந்தது. குறிப்பாக அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதும் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருவதாக கூறி ஈரான் மீது ஏராளமான பொருளாதாரத் தடைகளை விதித்தார்.
இந்தச் சூழலில், கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதோடு நூற்றுக்கும் மேற்பட்ட ஈரானின் முக்கிய அரசியல், ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்டனர். எனினும் இந்த இழப்பில் இருந்து மீண்ட ஈரான் அமெரிக்க ராணுவத் தளங்கள் இருந்த வளைகுடா நாடுகள் மீது கடுமையாகத் தாக்குதலை நடத்தியது. அதோடு முக்கிய கச்சா எண்ணெய் வர்த்தக தடமான ஹார்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது.
இந்தச் சூழலில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் இந்தப் போர் மீண்டும் தொடங்கியது. இரு தரப்பும் மாறமாறி தாக்கிக்கொண்ட சூழலில், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்தது.
இந்தசூழலில் தான் இரண்டு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் வகையில் மத்தியஸ்தம் செய்துவந்த பாகிஸ்தான், அமெரிக்கா-இரான் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் முன் எப்போதும் இல்லாத வகையில் நெருங்கிவிட்டதாக கூறியது.
இதுகுறித்து பதிவிட்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், “ஈரான் அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இதைவிட நெருக்கமாக நாம் இருந்ததில்லை. அடுத்த 24 மணி நேரத்தில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப மட்ட பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் நடைபெறும்” என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தான் போர் நிறுத்தம் குறித்து பதிவிட்டிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் அதையே பதிவிட்டுள்ளார். அவருடைய எக்ஸ் பதிவில், அமெரிக்கா, ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் எனவும், ஒப்பந்தம் கையெழுத்தான உடன் ஹோர்மூஸ் நீரிணை அனைவருக்கும் திறக்கப்படும் எனவும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மூலம், ஈரானுக்கு எந்த வகையிலும் அணு ஆயுதம் கிடைக்காது எனவும், அமைதி முழுமையாக திரும்பியதும், ஈரானின் கிரானைட் மலைக்கடியில் புதைக்கப்பட்டுள்ள செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை கைப்பற்றி அழிப்போம் எனவும், ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜூன் 14ஆம் தேதியான இன்று ட்ரம்ப்பின் பிறந்தநாளில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.