trump changed strait of hormuz name web
உலகம்

ஹார்முஸ் ஜலசந்திக்கு தன் பெயரை வைத்த டிரம்ப்.. அதிரடி வரைபடத்தால் பரபரப்பு!

அமெரிக்காவின் முற்றுகை தொடர்பாக ஈரானுடனான பதற்றங்கள் தொடர்ந்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையை "டிரம்ப் நீரிணை" எனப் பெயர்மாற்றம் செய்யப் பரிந்துரைக்கும் ஒரு பதிவை டிரம்ப் சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

INIYA FRANK

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கி, கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கும் சட்டத்தை நிறைவேற்றியதை அமெரிக்கா சட்டவிரோதம் என எதிர்க்கும் சூழலில், டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட வரைபடத்தில் ஹார்முஸ் ஜலசந்திக்கு ‘டிரம்ப் ஜலசந்தி’ என பெயரிட்டது உலகளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது; இது அமெரிக்க கடற்படை வலிமையை காட்டும் மேதைத்தனம் எனவும் அவர் வலியுறுத்துகிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சர்வதேச அளவில் மிக முக்கியமான கடல் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியின் பெயரைத் தனது பெயருக்கு மாற்றப் பரிந்துரைத்துள்ளது தற்போது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் பிரதான பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. மேலும், அந்தப் பாதையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்கும் சட்ட மசோதாவிற்கும் ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.

Trump's post on truth social

ஈரானின் இந்த நடவடிக்கையைச் சட்டவிரோத வசூல் எனக் குறிப்பிட்டு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அங்கு அமெரிக்கக் கடற்படையால் பலத்த முற்றுகை இடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கமான ட்ரூத் சோஷியலில் ஒரு வரைபடத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ஹார்முஸ் ஜலசந்தி இருக்கும் பகுதிக்குத் தனது பெயரைச் சூட்டி 'டிரம்ப் ஜலசந்தி' (Strait of Trump) என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்த முற்றுகை நடவடிக்கையை ஒரு மேதைத்தனம் என்று வர்ணித்துள்ள டிரம்ப், இது அமெரிக்கக் கடற்படையின் வலிமையைப் பறைசாற்றுவதாகக் கூறியுள்ளார். ஈரான் தனது அணுசக்தி திட்டங்களைக் கைவிடும் வரை எவ்வித ஒப்பந்தமும் எட்டப்படாது என்றும், தற்போதைய தடையானது வான்வழித் தாக்குதல்களை விட அதிகத் தாக்கம் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு முன்னதாகத் தடையை நீக்க வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கையை நிராகரித்துள்ள டிரம்ப், நிபந்தனைகளுக்கு ஈரான் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்தும் பரிசீலிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

IRGC naval patrol at hormuz

பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் இந்த ஹார்முஸ் ஜலசந்தி, உலக எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள மிக முக்கியமான பாதையாகும். 13 முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை புகழ்பெற்றிருந்த ஹார்முஸ் என்ற பண்டைய துறைமுக நகரத்தின் பெயராலேயே இது அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது