ட்ரம்ப் - மொஜ்தபா காமேனி Pt web
உலகம்

”பூமியில் இருந்து துடைத்து எறியப்படுவார்கள்” - ஈரான் உச்சத் தலைவருக்கு ட்ரம்ப் பதிலடி.!

ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனி, தனது முதல் அதிகாரப்பூர்வ உரையில் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார் இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.

PT WEB

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலைத் தொடுத்தன. இந்த இரு நாடுகளின் கூட்டுத்தாக்குதலில் போரின் முதல் நாளான பிப்ரவரி 28-ம் தேதி ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, தங்கள் நாட்டின் தலைவர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்போவதாக சூளுரைத்த ஈரான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளவாடங்கள் மற்றும் இஸ்ரேலின் மீது ராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியது. அதேசமயம், அமெரிக்காவும் ஈரான் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.

Ships waiting at The Strait of Hormuz

இந்த சூழலில், போர் காரணமாக ஈரான் பாரசீக வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் ஹார்முஸ் நீரிணையை மூடியிருக்கிறது. இதன் காரணமாக, உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 40% பங்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அந்த வர்த்தகம் பெரும்பாலும் முடங்கியுள்ளது. இதற்கிடையில், ஈரானின் புதிய உச்சத் தலைவராக பதவியேற்ற அயதுல்லா காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி தனது முதல் உரையில், தொடக்கப் பள்ளியின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பெரும்பாலான குழந்தைகள் உட்பட , கொல்லப்பட்ட 165 பேரின், இரத்தத்திற்குப் பழிவாங்குவோம் என்று சூளுரைத்திருந்தார் .

முன்னதாக, பிப்ரவரி 28ஆம் தேதி சனிக்கிழமை காலை, தெற்கு ஈரானில் உள்ள மினாப் நகரில் உள்ள "ஷாஜாரே தய்யீபே" பள்ளி மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு ஏவுகணைத் தாக்குதலால், 7 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் 165 பேர் கொல்லப்பட்டனர். 95 க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இந்தசூழலில் குழந்தைகள் படுகொலையின் படங்கள் சமூக ஊடக தளங்களில் பரவியது, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதைத் தொடர்ந்தே, புதிய உச்சத்தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மொஜ்தபா காமேனி, கொல்லப்பட்ட குழந்தைகளின் ரத்தத்திற்கு பழிவாங்குவோம் எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும் இல்லையெனில் அவை ஈரானியப் படைகளால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகும் எனவும் எச்சரித்திருக்கிறார்.

mojtaba khamenei

இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானின் பயங்கரவாத ஆட்சியை அமெரிக்கா முற்றிலுமாக அழித்து வருகிறது. ஈரானின் கடற்படையை காலி செய்து விட்டோம்; அவர்களின் விமானப்படையை அழித்து விட்டோம். ஏவுகணைகள், ட்ரோன்கள் என அனைத்தும் அழிக்கப்பட்டு வருகின்றன. ஈரானின் தலைவர்கள் பூமியின் முகத்திலிருந்து துடைத்தெறியப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். மேலும், எங்களிடம் இணையற்ற ஆயுதங்கள், அளவுக்கு அதிகமான வெடிமருந்துகள் மற்றும் ஏராளமான நேரம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.