அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானின் ஆயுதத் திறனைப் பாராட்டியதுடன், அவர்களின் புத்திசாலித்தனத்தை குறிப்பிடுவது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், ஈரானின் ராணுவத்தை சிதைத்ததாகவும், ஹார்முஸ் ஜலசந்தியில் கூடுதல் கப்பல்கள் தேவைப்படுவதாகவும் அவர் கூறியதன் பின்னணி கேள்விகளை எழுப்புகிறது.
செய்தியாளர் - M.மீரா
அமெரிக்காவுடன் கடுமையாக மோதிக்கொண்டிருக்கும் ஈரான்... அந்த நாட்டின் ஆயுதத் திறனை இப்போது பாராட்டியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!
ஈரானியர்கள் மிகவும் புத்திசாலிகள்... அவர்கள் சிறந்த ஆயுதங்களைத் தயாரிக்கிறார்கள்! என்று டிரம்ப் கூறியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. ஈரானைத் தோற்கடித்துவிட்டோம் என்று தொடர்ந்து கூறிவரும் ட்ரம்ப், இப்போது ஈரானைப் பாராட்டுவது ஏன்? உண்மையிலேயே ஈரானின் ராணுவ பலத்தை அமெரிக்கா குறைத்து மதிப்பிட்டுவிட்டதா? ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது? விரிவாகப் பார்க்கலாம்
மிசிசிப்பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போதுதான், டொனால்ட் ட்ரம்ப் தனது உரையில், ஈரானியர்கள் மிகச் சிறந்த ஆயுதங்களைத் தயாரிக்கிறார்கள், அவர்கள் மிகவும் புத்திசாலியான மனிதர்கள்" (Iranians make great weapons, they are very smart people) என்று நேரடியாக அவர்களின் ராணுவத் திறனைப் பாராட்டினார். ஈரானியர்களை வலிமையான மற்றும் திறமையான போராளிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்தப் பாராட்டுடன் சேர்த்து அவர் கூறிய மற்ற விஷயங்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் நிலைக்கு நெருங்கிவிட்டதாகவும், அதனைத் தடுக்கவே அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பி-2 ரக குண்டுவீச்சு விமானங்கள் ஈரானின் அணுசக்தி தொடர்பான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதையும் அவர் குறிப்பிட்டார்.
ஈரானின் கடற்படைக்கு எதிராக அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் குறித்துப் பேசிய ட்ரம்ப், ஈரானிடம் இருந்த 159 கப்பல்கள் கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டதாகக் கூறினார். மேலும், 268 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும், ஈரானின் ரேடார் அமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒருபுறம், ஈரானின் ராணுவத் திறனைப் பெருமளவில் சிதைத்துவிட்டதாகக் கூறும் டிரம்ப்... மறுபுறம், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவுக்கு இன்னும் அதிகமான கப்பல்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் கடற்படை மற்றும் ராணுவக் கட்டமைப்புகள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்கா கூறினால், ஹார்முஸ் ஜலசந்தியில் கூடுதல் கப்பல்கள் ஏன் தேவைப்படுகின்றன?
இந்த போரில் அமெரிக்காவின் சொத்துக்களுக்கு கடுமையான சேதங்கள் ஏற்பட்டதாகவும் ஆயுதங்களை இழநதுள்ளதாகவும் ஆயுத பற்றாக்குறை அமெரிக்க ராணுவத்தில் ஏற்பட்டதாகவும் பல்வேறு ஆய்வறிக்கைகள் கூறுவது உண்மையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அல்லது மத்திய கிழக்கில் மேலும் போரை நீட்டிக்க மேலும் பல போர்க்கப்பல்கள் தேவைப்படலாம் என்றும் கூறப்படுகிறது.