டொனால்ட் டிரம்ப் ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவர ராணுவ ‘பிரெயின்ஸ்டார்மிங்’ மின்னஞ்சல் மூலம் யோசனைகள் கேட்பது அரிதான நடைமுறையாகும். ஹோர்முஸ் நீரிணை தாக்குதல்கள், ஆழமான அணு வசதிகள், தரைப்படை ஆபத்து, வளைகுடா நாடுகளின் அழுத்தம் ஆகிய காரணங்களால் அமெரிக்கா தனது ஆரம்ப இலக்கான ஈரான் அணு திட்டத்தை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் இருந்து பின்வாங்கும் சூழல் உருவாகியுள்ளது.
ராணுவத்தில் இதுபோன்ற 'Brainstorming' மின்னஞ்சல் அனுப்பி கருத்துகளைத் திரட்டுவது மிகவும் அரிதான நடைமுறையாகக் கருதப்படுகிறது. இது, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நிபந்தனைகளுக்கு இணங்க ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவருவதற்கான வழக்கமான ராணுவ வாய்ப்புகள் குறைந்து வருவதை காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைய உத்திகளை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து CNN-க்கு பேசிய CENTCOM செய்தித் தொடர்பாளர் கேப்டன் டிமோத்தி ஹாக்கின்ஸ், 'புதுமையான சிந்தனை மற்றும் செயல்பாட்டில் CENTCOM-க்கு நீண்டகால அனுபவம் உள்ளது. உயர்ந்த செயல்திறனை அடைவதற்காக, பதவியைப் பொருட்படுத்தாமல் அனைவரிடமிருந்தும் யோசனைகளை கேட்பது வழக்கமான நடைமுறையே' என்றார்.
இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ஈரானுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத தாக்குதலை நடத்துவதாக டிரம்ப் எச்சரித்திருந்தார். ஆனால் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தொலைபேசியில் பேசி பதற்றத்தை தணிக்குமாறு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து அந்தத் தாக்குதல் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் செல்வாக்கை குறைத்து, அந்த நாட்டை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வர அமெரிக்கா பல வாரங்களாக தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருப்பினும் இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
ஈரானின் அணு வசதிகள் ஆழமான நிலத்தடியில் அமைந்திருப்பதால், அமெரிக்காவின் சக்திவாய்ந்த வழக்கமான ஆயுதங்களால் அவற்றை முழுமையாக அழிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்குத் தரைப்படை நடவடிக்கை தேவைப்படலாம். இருப்பினும், அதுபோன்ற ஆபத்தான முடிவை டிரம்ப் எடுக்க விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுவரை மத்திய கிழக்கில் நடந்த மோதல்களில் குறைந்தது 18 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனால் முழுமையான வெற்றியை விட, அடையாள வெற்றியைப் பெற்று போரை முடிக்கும் வாய்ப்பையே டிரம்ப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் அணு திட்டத்தை முற்றிலும் ஒழிப்பது என்ற ஆரம்ப இலக்கில் இருந்து அமெரிக்கா பின்வாங்கும் நிலையும் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்காவின் தொடர் வான்வழித் தாக்குதல்கள் மட்டும் ஈரானின் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டை மாற்றாது என்று CIA, பாதுகாப்பு உளவுத்துறையான DIA மற்றும் அமெரிக்க ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் மதிப்பிட்டுள்ளனர். 'வான்வழித் தாக்குதல்களுக்கு அதன் வரம்புகள் உள்ளன' என்று அமெரிக்க கூட்டுப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் Dan Cain அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார்.