அமெரிக்க அதிபர் மாளிகை ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டு ட்ரம்ப்பின் உடல்நிலை குறித்து விளக்கியுள்ளது. அதில் ட்ரம்ப் நல்ல உடல்நலத்தோடு இருப்பதாகவும், விர்ஜினியாவில் கோல்ஃப் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் ஃபோட்டோவை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உயிரிழந்துவிட்டதாக பரவிய தகவலுக்கு, வெள்ளை மாளிகை விரிவாக விளக்கம் அளித்துள்ளது. Is Trump Dead? என்ற ஹாஸ்டேக் பெரிய அளவில் ட்ரெண்டான நிலையில், ட்ரம்ப்பின் உடல்நிலை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.. கடந்த சில நாட்களாக அவர் பொதுவெளியில் தலைகாட்டாததால், இந்த கேள்வி வலுப்பெற்றுள்ளது. இந்த நேரத்தில், வெள்ளை மாளிகையின் விளக்கம் என்ன என்று விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவில் 47வது அதிபராக பதவி ஏற்றிருக்கும் ட்ரம்ப்புக்கு, இப்போது 79 வயதாகும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில், தென் கொரிய அதிபர் மியூங்க்-ஐ சந்தித்து பேசியிருந்தார் ட்ரம்ப். அப்போது, அவரது கையில் சிறிய அளவில் காஸ்மெட்டிக் பேட்ச் ஒன்று தென்பட்ட நிலையில், ட்ரம்ப்புக்கு உடல்நிலை சரி இல்லை என்று சமூகவலைதளங்களில் பேசப்பட்டது. அடுத்த 4 ஆண்டுகளுக்கு அவர் அதிபராக தொடர்வாரா என்பது வரை விவாதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக விளக்கினார் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ்.
இப்படியாக சென்ற நிலையில், ட்ரம்ப் உயிரிழந்துவிட்டதாக Is Trump Dead?.. Trump Dead என்ற ஹாஸ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகின. பலரும் இதுதொடர்பாக பதிவுகளைப் போட்ட நிலையில், இணைய உலகம் பரபரப்பானது. கடந்த 26ம் தேதிக்குப் பிறகு ட்ரம்ப்பை பொதுவெளியில் பார்க்க முடியாததும் இந்த கேள்விக்கு வலு சேர்த்தது. ஒரு பக்கம் கையில் பேண்டேஜ்.. மறுபுறம் பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்தது என்று ட்ரம்ப் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
இந்த நிலையில்தான், அமெரிக்க அதிபர் மாளிகை ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டு ட்ரம்ப்பின் உடல்நிலை குறித்து விளக்கியுள்ளது. ட்ரம்ப் நல்ல உடல்நலத்தோடு இருப்பதாகவும், விர்ஜினியாவில் கோல்ஃப் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் ஃபோட்டோவை வெளியிட்டுள்ளது. முன்னதாக ட்ரம்ப்புக்கு வயது மூப்பு மற்றும் நீண்ட நேரத்திற்கு நிற்பதால் காலில் ஏற்படும் தொந்தரவு இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.
இப்படியான சூழலில், ட்ரம்ப் நல்ல உடல்நிலையோடு இருக்கிறார்.. எனினும் அவருக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால் அடுத்த அதிபராக நான் பதவி ஏற்க தயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார் ஜேடி வான்ஸ். இப்படி, அடுத்தடுத்த தகவல்களை முடிச்சுப்போட்ட நெட்டிசன்கள் ட்ரம்ப் இறந்துவிட்டதாக பேசத்தொடங்கினர். பலரும் இறங்கல் செய்திவரை எழுதத்தொடங்கிய நிலையில், ட்ரம்ப்புக்கு எதுவும் ஆகவில்லை.. நல்ல உடல்நலத்தோடு இருப்பதாக வெள்ளை மாளிகை விவரித்துள்ளது.