Trump's influence has declined  Reuters
உலகம்

கடுமையாக சரிந்த டிரம்ப் செல்வாக்கு : தேர்தல் வந்தால் அவ்வளவுதான்... SHOCK கொடுத்த கருத்து கணிப்பு !

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்பின் செல்வாக்கு முன்னெப்போதும் இல்லாத அளவு கடுமையாக சரிந்துள்ளது.

Praveen Joshva L

டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சர்வதேச உறவுகள் மீது மக்களின் அதிருப்தி அதிகரித்துள்ள நிலையில், அவரது மக்கள் ஆதரவு 31% ஆகக் குறைந்துள்ளது. எதிர்வரும் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு அதிக ஆதரவு கிடைக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன, இது குடியரசுக் கட்சிக்கு பெரும் சவாலாக அமையும்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றவுடன் 1974-ஆம் ஆண்டு வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301-ஐப் பயன்படுத்தி பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்தார். அதிலும் குறிப்பாக இந்தியா, சீனா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 60 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய சுங்க வரிகளை விதித்தார்.

இதன் காரணமாக அமெரிக்காவுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் இடையே இருந்த உறவுகள் மோசமடைந்தது. இறக்குமதி பொருள்கள் குறைந்ததால் அமெரிக்காவில் பொருள்களின் விலை உச்சத்தைத் தொட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதோடு, வணிகர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் நட்பு நாடுகளான கனடா, நெதர்லாந்து மற்றும் நேட்டோ அமைப்புகளுடன் டிரம்ப் மோதலில் ஈடுபட்டார். அதன் உச்சகட்டமாக ஈரானுடன் அமெரிக்க மேற்கொண்ட போர் தற்போது வரை 8 மாதங்கள் கடந்தும் முடிவடையாமல் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக டிரம்ப்பின் செல்வாக்கு அமெரிக்காவில் கடுமையாக சரிந்ததாகக் கூறப்பட்டது.

அமெரிக்காவில் விரைவில் நாடாளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் குறித்து Reuters மற்றும் Ipsos நிறுவனங்கள் இணைந்து மக்களிடம் ஒரு கருத்து கணிப்பை நடத்தியுள்ளன. அதில் அதிபர் டிரம்பின் மக்கள் ஆதரவு 31% ஆகச் சரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 68% பேர் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிதி நிர்வாகம் மீது அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு, 47% வாக்காளர்கள் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு (Democrats) ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், 35% வாக்காளர்கள் மட்டுமே குடியரசுக் கட்சிக்கு (Republicans) ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரம் 50% பெண்கள் டிரம்ப் மீது அதிருப்தி தெரிவித்து, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டிரம்பின் மக்கள் ஆதரவு இதுவரை இல்லாத அளவு கடுமையான சரிவை சந்தித்துள்ளது எதிர்வரும் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு சிக்கலாக அமையும் என்று கூறப்படுகிறது. இந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றால் டிரம்ப் அரசால் எந்த சட்டதிருத்தத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றமுடியாத நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.