ஈரான் - அமெரிக்கா Pt web
உலகம்

ஈரான் மின் நிலையங்கள் மீது தாக்குதல் நிறுத்தம்.? ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகள் மீது திட்டமிடப்பட்டிருந்த அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்குமாறு அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

Premkumar S

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் 4-வது வாரத்தை எட்டியிருக்கும் நிலையில், ஈரான் உச்சத் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய ஈரானிய அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தான், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரான்.. உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் முடக்கிவைத்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி - அதிபர் ட்ரம்ப்

இதன்காரணமாக, உலக அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தான், ஹார்முஸ் நீரிணையை 2 நாட்களுக்குள் திறக்காவிடில் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என நேற்று தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, சில மணி நேரங்களில் ஈரானும், எதிரி நாட்டுக் கப்பல்களைத் தவிர மற்றக் கப்பல்கள் கடந்து செல்லலாம் என உத்தரவிட்டது.

இந்த சூழலில் தான், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சுமுகமான பேச்சு வார்த்தை கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, ஈரானின் மின்சாரம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்ட தாக்குதல்களை 5 நாள் இடைநிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். எனினும் பேச்சு வார்த்தை குறித்து ஈரான் எந்த வகையான உறுதிப்படுத்தலும் அளிக்கவில்லை. இந்நிலையில் தான், அதிபர் ட்ரம்பின் ஈரான் மின்சார நிலையங்கள் மீதான 5 நாட்கள் தாக்குதல் நிறுத்த அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது. இது, மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஈரான் அதிபர் பெசஷ்கியான்

அதேசமயம், ஈரான் மீதான தாக்குதல் தற்காலிக நிறுத்தம் குறித்தான ட்ரம்ப் முடிவுக்கு கருத்து தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள ஈரான் தூதரகம், ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பை அமெரிக்கா தாக்கினால், ஒட்டுமொத்த பிராந்தியத்தின் எரிசக்தி உள்கட்டமைப்பையும் குறிவைப்போம் என்ற ஈரானின் எச்சரிக்கையையடுத்தே ட்ரம்ப் மின்சார நிலையங்களை தாக்கும் முடிவில் இருந்து பின்வாங்கியிருக்கிறார் எனத் தெரிவித்திருக்கிறது. அதேசமயம், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடந்ததா? இல்லையா? என்ற அறிவிப்பும் ஈரான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.