Spain Message to Israel
Spain Message to IsraelWeb

அமெரிக்காவிற்கு 'NO' சொன்ன ஸ்பெயின்.. ஏவுகணையில் நன்றி சொன்ன ஈரான்! பின்னணி என்ன?

மெசேஜ் ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன்னதாக அதன் மீது ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் புகைப்படம் ஒட்டப்பட்டு THANK YOU என்று எழுதப்பட்டு ஏவப்படுகிறது.
Published on
Summary

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் 24 நாட்களாக நீடிக்க, ஈரான் புதிய அரசியல் யுக்தியை கையாள்கிறது. ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் போர் எதிர்ப்பு வாசகங்கள் ஏவுகணைகளில் ஒட்டப்பட்டுள்ளன. ஸ்பெயின், அமெரிக்க ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதிக்க மறுத்ததால், ட்ரம்ப் வர்த்தக உறவுகளை துண்டித்துள்ளார். இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் 24 நாட்களாகத் தொடர்ந்து வரும் நிலையில், போர்க்களத்தில் ஒரு புதிய வகை அரசியல் யுக்தியை ஈரான் கையாண்டுள்ளது. பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகளின் ராணுவ நடவடிக்கை தொடங்கியதில் இருந்து, வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், இஸ்ரேல் மீது ஏவப்படும் ஏவுகணைகளில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் போர் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் (Stickers) ஒட்டப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Moron Air Base , Spain
Moron Air Base , Spain web

ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் ஈரானின் மெஹ்ர் (Mehr News Agency) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள காட்சிகளில், ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன்னதாக அதன் மீது ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸின் புகைப்படம் ஒட்டப்படுகிறது. அதனுடன், "நிச்சயமாக இந்தப் போர் சட்டவிரோதமானது மட்டுமல்ல, மனிதநேயமற்றதும்கூட. நன்றி பிரதமர்" (Of course, this war is not only illegal, but also inhuman. Thank you, Prime Minister) என்ற வாசகங்கள் ஆங்கிலம் மற்றும் பாரசீக (Persian/Farsi) மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களில் ஒரு சிலரே இந்தப் போரைத் தொடக்கத்தில் இருந்தே கண்டித்து வரும் நிலையில், பிரதமர் சான்செஸ் இந்தத் தாக்குதல்களை "நியாயமற்றவை, சட்டவிரோதமானவை மற்றும் ஆபத்தானவை" என்று பகிரங்கமாகக் குறிப்பிட்டு, "போர் வேண்டாம்" (No to War) என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

இந்தச் சூழலில், ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்காவிற்குத் தனது நாட்டின் ரோட்டா (Rota) கடற்படைத் தளம் மற்றும் மோரோன் (Moron) விமானத் தளத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்க ஸ்பெயின் மறுத்துவிட்டது. ஸ்பெயினின் இந்தத் தடையால் அதிருப்தியடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்த நாட்டுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிப்பதாக அறிவித்துள்ளார். இதற்கிடையில், லண்டன் போன்ற நகரங்களில் போருக்கு எதிராகப் போராடும் மக்களுக்கும், ட்ரம்பின் போர் நடவடிக்கைகளைக் கண்டிப்பவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வாசகங்களை ஈரான் ராணுவத்தினர் ஏவுகணைகளில் பதிவிட்டுள்ளனர். மேலும், "மத்திய கிழக்குப் பகுதியைவிட்டு கடைசி அமெரிக்க வீரர் வெளியேறும் வரை எங்களது தாக்குதல் ஓயாது" என்று வீரர்கள் ஏவுகணைகளில் எழுதியுள்ளனர்.

Rota , naval Station , Spain
Rota , naval Station , Spain X

இந்தப் போர் நீடிப்பதன் காரணமாகச் சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தைச் சீராக்கவும், போர் நிறுத்தத்தைக் கொண்டு வரவும் ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், இந்தப் போரை நிறுத்தக்கூடாது என்பதில் அமெரிக்காவும், ஈரானும் பிடிவாதமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com