அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். பல்வேறு திட்டங்களை ரத்து செய்தும், புதிய பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவில் அரசு ஊழியர்களை குறைக்கும் திட்டத்தில் அதிபர் ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இதுதொடர்பாக சுமார் 20 லட்சம் அரசு ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. பதவியிலிருந்து தாமாகவே முன்வந்து விலகும் ஊழியர்களுக்கு 8 மாத ஊதியம் அளிக்கப்படும் என மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முடிவெடுக்க பிப்ரவரி 6ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் ஊழியர்கள், ராணுவ வீரர்கள், குடிவரவு அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஊழியர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட துறைகளுக்கு இந்த திட்டத்தில் இருந்து விதிவிலக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், பணியாளர் மேலாண்மை அலுவலகத்தின் மின்னஞ்சலில் விஆர்எஸ் திட்டத்தை தேர்வு செய்யாதவர்களுக்கு எதிர்காலத்தில் பணிநீக்கம் செய்யப்படும் வாய்ப்பும் உள்ளதாக எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சுமார் 10% ஃபெடரல் பணியாளர்கள் அதாவது, சுமார் 2,00,000 ஊழியர்கள் இந்த விஆர்எஸ் திட்டத்தைத் தேர்வு செய்யலாம் என்று ட்ரம்ப் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. இது அரசாங்கத்திற்கு டாலர் 100 பில்லியன் வரை சேமிப்பைக் கொடுக்கும் எனக் கணக்கிடப்படுகிறது. அதே நேரத்தில் அதிகளவு பணியாளர்கள் வெளியேறும் பட்சத்தில் அரசு நிர்வாகம் பாதிக்கப்படும் என்றும் எச்சரிக்கைகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு வீட்டிலிருந்தே பணிபுரிந்த ஃபெடரல் (அரசு) ஊழியர்கள் முழுநேர அலுவலகங்களுக்குத் திரும்ப வேண்டும் என ட்ரம்ப் பதவியேற்றபோது, கட்டளையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், அமெரிக்க அரசின் நிர்வாகத்திறனை மேம்படுத்தும் வகையில் DEPARTMENT OF GOVERNMENT EFFICIENCY என்ற பெயரில் பிரத்யேக துறை ஒன்றை ட்ரம்ப் ஏற்படுத்தியுள்ளார். இதற்கு பொறுப்பு அமைச்சராக பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.