அமெரிக்கா | ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு தடை.. ட்ரம்ப் உத்தரவு!
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். பல்வேறு திட்டங்களை ரத்து செய்தும், புதிய பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார்.
அந்த வகையில், அமெரிக்காவில் பாதுகாப்புப் படைகளில் மாற்றுப் பாலினத்தவருக்குத் தடைவிதிக்க வகை செய்யும் உத்தரவில், டொனால்டு ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டார். ட்ரம்ப் தனது உத்தரவில், ’அமெரிக்கப் படைகளின் சேவை, ஒரு மரியாதைக்குரிய, உண்மையுள்ள, ஒழுக்கமான வாழ்க்கை முறைக்கு, தாங்கள் பிறந்த பாலினத்தை அல்லாமல் வேறு பாலினமாக அடையாளம் காணும் நபர்களுடன் முரண்படுகிறது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைகூட, ராணுவத் தயார்நிலைக்கு தீங்கு விளைவிக்கலாம் என்று தெரிவிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படலாம்’ எனக் கூறப்படுகிறது. இதன்மூலம், அமெரிக்க ராணுவ சேவையில், மாற்றுப் பாலினத்தவர் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்காலத்தில் தடை ஏற்படுத்த வழிவகை செய்யப்படும்.
தன்னுடைய முதல் பதவிக் காலத்திலேயே ட்ரம்ப் இதுகுறித்த உத்தரவை பிறப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு அடுத்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ஜோ பைடன், ட்ரம்பின் உத்தரவை நீக்கி அதிரடி காட்டினார். ஆனால், இந்த முறை ஆரம்பத்திலேயே அதிரடி காட்டியுள்ளார். முன்னதாக, அதிபராகப் பதவியேற்கும்போது “நாட்டில் ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு பாலினங்கள் இருக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தி இருந்தார். அதன் தொடர்ச்சியாகவே தற்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.