அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் குடும்ப சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல், உலகையே திரும்பிப் பார்க்கும் வகையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில், ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்றதற்குப் பிறகு கிரிப்டோகரன்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். அமெரிக்க அரசின் ஆதரவால், பலரும் அதில் அதிகளவில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். அதன் விளைவு, இதுவரை இல்லாத அளவுக்கு கிரிப்டோகரன்சி உச்சத்தைத் தொட்டு வரலாறு கண்டது. ஆனால், கடந்த சில நாட்களாக அதன் நிலைமை மொத்தமாக மாறியது. பிட்காயின் தொடங்கி எல்லா கிரிப்டோவும் சரிய ஆரம்பித்தது. செப்டம்பர் மாதத்திலிருந்து அமெரிக்கன் பிட்காயின் கார்ப்பரேஷனின் பங்குகள் 50%க்கும் மேல் சரிந்துள்ளன.
இதனால் ட்ரம்ப் குடும்பத்தின் செல்வத்திலிருந்து $300 மில்லியனுக்கும் அதிகமான பங்குகள் குறைந்துள்ளன. அதன் விளைவு, ட்ரம்பின் குடும்பமும் இந்த நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. இந்த சரிவால் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இது ரூ.9,800 கோடிக்கு மேல்) ட்ரம்ப் குடும்பம் இழந்துள்ளது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுமார் $7.7 பில்லியனாக இருந்த ட்ரம்ப் குடும்பத்தின் நிகர சொத்து மதிப்பு, இப்போது ஒரே மாதத்தில் $6.7 பில்லியனாக குறைந்துள்ளது. மீம்காயின்கள் மற்றும் ட்ரம்ப் முதலீடு செய்திருந்த கிரிப்டோ மதிப்பு சரிந்ததே இதற்கு முக்கியக் காரணம் என அமெரிக்க செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் நியூஸ் சுட்டிக்காட்டுகிறது.
இந்த சரிவின் பெரும்பகுதி ட்ரம்ப் குடும்பத்தினரின் அதிக ஆபத்துள்ள டிஜிட்டல் சொத்துக்களின் வெளிப்பாட்டுடன் தொடர்புடையது. அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற கொஞ்ச நாட்களிலேயே ’ட்ரம்ப் மீம் காயின்’ என்ற தனது சொந்த கிரிப்டோவை வெளியிட்டார். இருப்பினும், அதன் மதிப்பு சமீபத்தில் சுமார் 25% வரை சரிந்தது. அதேபோல ட்ரம்பின் மகனான எரிக் ட்ரம்ப் பிட்காயின் மைனிங் செய்யும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார். அதன் மதிப்பு உச்சத்திலிருந்து கிட்டத்தட்டப் பாதியாகக் குறைந்துள்ளது. மேலும், ட்ரம்பின் மற்றொரு நிறுவனமான ட்ரம்ப் மீடியா & டெக்னாலஜி குரூப், கிரிப்டோ நிதியை உருவாக்க திட்டமிட்டிருந்தது.
அதன் பங்குகளும் கடுமையாகச் சரிந்துள்ளது. தவிர, ட்ரம்ப் குடும்பத்தினர் தங்கள் கிரிப்டோ முயற்சிகளில் பெருமளவில் இழந்தது மட்டுமல்லாமல், அவரது பெயரில் முதலீடு செய்வதன் மூலம் பணக்காரர் ஆகலாம் என்று நம்பிய பலரும் ஏமாற்றத்தைச் சந்திருப்பதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. உதாரணத்திற்கு, ஜனவரி மாதத்தில் ட்ரம்பின் மீம் நாணயத்தை அதன் உச்சத்தில் வாங்கிய முதலீட்டாளர்கள், நவம்பர் மாதத்திற்குள் தங்கள் முதலீட்டின் முழு மதிப்பையும் இழந்திருப்பார்கள் என்று அறிக்கை கூறுகிறது. இந்த சரிவு கிரிப்டோகரன்சி முதலீடுகளுடன் தொடர்புடைய நிலையற்ற தன்மை மற்றும் அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது. இந்த கிரிப்டோ சந்தை சரிவுகளுக்கு மத்தியிலும், தான் தளர்ந்து போகாமல் முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாகக் எரிக் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.