donald trump reuters
உலகம்

நோபல் பரிசு கொடுக்கல.. இதையாவது கொடுங்க! டிரம்பின் அடுத்த ஆசை! என்ன விருது தெரியுமா?

நோபல் பரிசு தனக்கு வழங்க வேண்டும் என்று கூறிவந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது மற்றொரு உயரிய விருதையும் தனக்கு வழங்க வேண்டும் என்று பேசி வருகிறார். அப்படி அவர் கேட்கும் விருது என்ன? என்பதைப் பார்க்கலாம்

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப், கடந்த சில ஆண்டுகளாகவே அமைதிக்கான நோபல் பரிசைத் தனக்கு வழங்க வேண்டும் என்று கூறி வருகிறார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் உட்பட, உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவிய போர் பதற்றங்களைத் தடுத்து நிறுத்தி, போர்களை முடிவுக்குக் கொண்டுவந்ததாக அவர் கூறி வருகிறார். இதன் மூலம் லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதைத் தடுத்ததாகவும், எனவே அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவதற்கு தானே சரியான தேர்வாக இருப்பதாகவும் அவர் தெரிவித்து வருகிறார்.

nobel prize

ஆனால், நோபல் பரிசுக் குழு அவரது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. கடந்த ஆண்டு, வெனிசுலாவில் ஜனநாயக மாற்றத்திற்காகப் போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் சர்வதேச நீதியை வலுப்படுத்துவதிலும் ஆற்றிய பணிக்காக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

தனக்கு நோபல் பரிசு வழங்கப்படாததைக் கடுமையாக விமர்சித்த டிரம்ப், இதற்காக நோர்வே நாட்டின் மீது அதிருப்தி தெரிவித்ததுடன், இது அந்த நாட்டுக்கு நீங்காத களங்கம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது நோபல் பரிசு மீதான தனது விருப்பத்துடன், சர்வதேச அளவில் புகழ்பெற்ற மற்றொரு விருதான புலிட்சர் பரிசையும் தனக்கு வழங்க வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார். புலிட்சர் பரிசு என்பது பத்திரிகைத் துறை, இலக்கியம் மற்றும் இசை உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் புகழ்பெற்ற விருதாகும்.

donald trump

தெற்கு கரோலினாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய டிரம்ப், தனக்கு நோபல் பரிசும் புலிட்சர் பரிசும் வழங்கப்படாதது குறித்துப் பேசினார். குறிப்பாக, எழுத்துப் பணிக்காகத் தனக்குப் புலிட்சர் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும், ரஷ்யா தொடர்பான விசாரணைகள் குறித்த செய்திகளுக்காகப் புலிட்சர் பரிசுகளை வென்ற பத்திரிகையாளர்களின் அறிக்கைகள் துல்லியமற்றவை என்றும் அவர் விமர்சித்தார். அந்த விருதுகளைப் பெற்றவர்கள் அவற்றைப் பெற்றிருக்கக் கூடாது என்றும் அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இவ்வாறு, தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும் டிரம்ப், தற்போது புலிட்சர் பரிசு குறித்தும் பேசியிருப்பது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.