donald trump reuters
உலகம்

ஈரான் மீது புதிய தாக்குதல் இல்லை.. பின்வாங்கிய ட்ரம்ப்! பின்னணி என்ன?

ஆனால், போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் உடனடியாக ஏற்படும் என்ற நம்பிக்கை அமெரிக்க அதிகாரிகளிடம் இல்லை.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

ஈரான் மீது புதிதாக ராணுவத் தாக்குதல்களை நடத்தும் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக கூறியுள்ளார். வளைகுடா நாடுகள் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியிலும், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியபோதும் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

donald trump

இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்காவிடம் உலகின் மிகச்சிறந்த ராணுவத் தளவாடங்கள் தயாராக இருப்பதாகவும், அவற்றைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட ஈரானின் அண்டை நாடுகள் புதிய தாக்குதல்களைத் தொடங்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி, ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜதந்திர முயற்சிகளும் தீவிரமடைந்துள்ளன.

US president & Qatar Pm

ஆனால், போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் உடனடியாக ஏற்படும் என்ற நம்பிக்கை அமெரிக்க அதிகாரிகளிடம் இல்லை. ஈரான் முன்வைத்துள்ள போர் நிறுத்தத் திட்டத்தையும் அமெரிக்கா ஏற்க மறுத்து வருகிறது.

இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு ஈரான் மீது மீண்டும் தீவிரமான தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ட்ரம்பின் இந்த அறிவிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது