இந்தியா மீது அமெரிக்க 50 சதவிகிதம் வரி விதித்திருக்கும் நிலையில் இரு நாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகத் தொடங்கின. அதற்கேற்றவாறுதான் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது பொருளாதார ஆலோசகர் பீட்டர் நவரோவும் சர்ச்சைக்குறிய பல கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போது அமெரிக்க வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வந்துள்ள நிலையில் பீட்டர் நவரோ கூறியுள்ள கருத்துகள் கவனம் பெறத் தொடங்கியுள்ளன. என்ன கூறியிருக்கிறார் பீட்டர் நவரோ? வரி குறைய வாய்ப்புள்ளதா ? விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியா அமெரிக்காவுடனான 5 கட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தை வெற்றி பெறாததைத் தொடர்ந்து பரஸ்பர வரி விதிப்பின் அடிப்படையில் இந்தியா மீது அமெரிக்கா 25 சதவிகித வரியை விதித்தது. அதனைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அபராதமாக 25% வரியை விதித்தது. மொத்தமாக இந்தியா மீது அமெரிக்கா 50 சதவிகித வரியை விதித்துள்ளாதால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. தொடர்ந்து, வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால் இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்தார்.
இதற்கிடையே இந்தியா, சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது. மேலும், சமீபத்தில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இவ்விரு நாடுகளுடனான இந்தியாவின் உறவை மேலும் வலுப்படுத்த அந்த சந்திப்பின்போது முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில்தான், இந்த சந்திப்பிற்கு பிறகு டிரம்பின் இந்தியா மீதான விமர்சனம் சற்று குறைந்துள்ளது.
இதையடுத்து, இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு ஆவலுடன் இருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்த சூழலில்தான் இன்று இந்தியா-அமெரிக்கா இடையே தடைபட்டிருந்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்த பிறகு நடைபெறும் முதல் பேச்சுவார்த்தை இது. ஏற்கனவே 5 சுற்றுகள் பேச்சுவார்த்தை முடிந்த நிலையில், ஆகஸ்ட் 25-ல் நடக்க இருந்த 6வது சுற்று பேச்சுவார்த்தை அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் தடைபட்டது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சோசியலில் வெளியிட்ட சமூக ஊடக பதிவில், “இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். வரும் வாரங்களில் எனது நல்ல நண்பரான மோடியுடன் பேசுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன். இரு பெரிய நாடுகளுக்கும் வர்த்தக பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என தெரிவித்திருந்தார்.
டிரம்ப்பின் இந்த பதிவுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ”இந்தியாவும் - அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள். இயல்பான கூட்டாளிகள். நமது வர்த்தகப் பேச்சுவார்த்தை நம் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையற்ற திறன்களை கண்டெடுப்பதற்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதிபர் ட்ரம்ப்புடன் பேசுவதை நானும் எதிர்நோக்கியுள்ளேன். இரு நாட்டு மக்களுக்கும் வளமான, பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க நாம் உழைப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில்தான், தொடர்ச்சியாக இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்த பீட்டர் நவரோ தற்போது, "இந்தியா பேச்சுவார்த்தைக்கு ரெடியாகிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி நல்லிணக்கமான, ஆக்கப்பூர்வமான தகவலைப் பகிர்ந்தார். அதற்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதிலளித்தார். அதேநேரம் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.. பேச்சுவார்த்தை எப்படிப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்," என்று தனியார் தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக இந்தியாமீது விமர்சனங்களை அள்ளி வீசிக்கொண்டிருந்த பீட்டர் நவரோ தற்போது தனது டோனை சற்றே தனித்திருப்பது உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது. இது, இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படுமா? ஒருவேலை வரி குறைப்பிற்கான வாய்ப்பு ஏற்படுமா? என்னும் எதிர்பார்ப்பையும் எழுப்பியுள்ளது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.