Top 10 world news PT
உலகம்

Top10 உலகச் செய்திகள்|அமெரிக்காவில் முதலீடு செய்ய ட்ரம்ப் அனுமதி To புதினைச் சந்தித்த ராஜ்நாத் சிங்!

ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில் சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

Prakash J

ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில் சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

1. தென்கொரியா முன்னாள் அமைச்சர் தற்கொலை முயற்சி

தென்கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டம் அண்மையில் கொண்டுவரப்பட்ட நிலையில், கடும் எதிா்ப்புக்கு பின்னா் திரும்பப் பெறப்பட்டது. இந்தப் பரிந்துரையை அதிபா் யூன் சுக் இயோலுக்கு அளித்த குற்றச்சாட்டில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சா் கிம் யாங் ஹயூன் கைது செய்யப்பட்டாா். இந்த நிலையில், அவர் சிறையில் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கிம் யாங் ஹயூன்

2. ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரில் இன்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், அந்நாட்டின் அமைச்சர் கலீல் உர்-ரஹ்மான் ஹக்கானி கொல்லப்பட்டார். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. பொது இடங்களில் கையில் துப்பாக்கி ஏந்தியபடியே வலம் வரும் ஹக்கானி கொல்லப்பட்டிருப்பது தலிபான் அரசுக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

3. சிரியா மக்களுக்கு பிரதமர் முகமது அல்-பஷீர் அழைப்பு

சிரியாவை சமீபத்தில் கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றிய நிலையில், அதிபா் பஷாா் அல்-அசாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, இடைக்கால பிரதமராக முகமது அல்-பஷீர் பொறுப்பேற்றுள்ளார். புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பிரதமர் முகமது அல்-பஷீர், சிரிய மக்கள் தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்புமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

4. அமெரிக்காவில் முதலீடு செய்ய ட்ரம்ப் அனுமதி

அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்டு ட்ரம்ப், ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதற்கிடையே கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில், 'அமெரிக்காவில் பில்லியன் டாலர் முதலீடு செய்பவர்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும்’ என்று டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருப்பது பலரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

5. சிரியாவில் இந்தியர்கள் மீட்பு

சிரியவில் நிலவிவரும் பதற்றமான சூழலில் முதல்கட்டமாக 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேர் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர்களாவர். மீட்கப்பட்ட இந்தியர்கள் பத்திரமாக லெபனான் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியா அழைத்துவரப்படுவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

6. ரஷ்ய அதிபரைச் சந்தித்த ராஜ்நாத் சிங்

இருநாட்டு இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் ரஷ்யா சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினைச் சந்தித்துப் பேசினார். இரு நாடுகள் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். ’’இந்தியா தனது ரஷ்ய நண்பர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். எதிர்காலத்திலும் அதை தொடருவோம்” என ராஜ்நாத் சிங் பின்னர் தெரிவித்தார்.

7. காஸாவில் உணவுப் பஞ்சம் அதிகரிப்பு

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நாடுகள் அளித்த உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்ட லாரிகள் காஸாவுக்குள் செல்ல இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதி மறுத்துள்ளது. இதனால் சர்வதேச அமைப்புகள் உணவுப் பொருள் விநியோகிப்பதை நிறுத்திவிட்டதால் பாலஸ்தீன மக்களின் முக்கிய உணவு ஆதாரமான சப்பாத்தி மாவுக்கு காஸா முழுவதும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவு தட்டுப்பாடு எதிரொலியாக காஸாவில் உணவுப் பண்டங்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

8. இந்துமதத் தலைவருக்கு ஜாமீன் மறுப்பு

வங்கதேசத்தில், தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்துமதத் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு, ஜாமீன் வழங்க அந்நாட்டு நீதிமன்றம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது ஜாமீன் மனு, கடந்த மாதம் 26இல் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் சாட்டோகிராம் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி சைய்புல் இஸ்லாம் மறுத்து ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார்.

9. நட்சத்திர ஆமைகளைக் கடத்திய இந்தியருக்கு சிறை

நட்சத்திர ஆமைகளைச் சட்டவிரோதமாகக் கொண்டுவந்த, இந்தியாவைச் சேர்ந்த அப்துல் ஜாபர் ஹாஜி அலி என்பவருக்கு சிங்கப்பூரில் 1 ஆண்டு மற்றும் 4 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அழிந்துவரும் உயிரினங்களைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர், 58 நட்சத்திர ஆமைகள் மறைத்து கொண்டுவந்தது தெரியவந்தது.

10. உக்ரைன் போரில் 7 லட்சம் ரஷ்யா வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பிறகு ரஷ்யா 7 லட்சம் வீரா்களை இழந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவர், ‘கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமாா் 7,00,000 ரஷ்ய வீரா்கள் இந்தப் போரில் உயிரிழந்துள்ளனா். அண்மை மாதங்களில் தினமும் சராசரியாக 1,000 வீரா்களை ரஷ்யா இழந்துவருகிறது. இந்தப் போருக்காக ரஷ்யா 20,000 கோடி டாலா் (ரூ.16,97,814 கோடி) செலவு செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.