வங்கதேசம்|மற்றொரு இந்துமத தலைவரும் கைது.. தொடரும் வன்முறை.. தடுத்து நிறுத்த ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்!
அண்டை நாடான வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது முதல் தற்போதுவரை, சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நிகழ்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதில் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள், வீடுகள், சொத்துகள், உடைமைகள் சேதமாக்கப்படுகின்றன.
அந்த வகையில், சிறுபான்மையினருக்கு ஆதரவாக இந்து சமூகத்தினர் நடத்திய போராட்டங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக, சம்மிலிதா சனாதானி ஜோட் என்ற இந்து அமைப்பின் தலைவரான ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாஸ் வங்கதேச அரசால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருந்தது.
அதேநேரத்தில், இந்து மதத் தலைவர் கைது தொடர்பாகவும் இதற்கு நீதி கேட்டும் வங்கதேசத்தில் ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம், சட்டோகிராமில் உள்ள இந்துக் கோயில்கள் தாக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வங்காளதேசத்தின் சட்டோகிராமில் மற்றொரு இந்து மதத் தலைவர், கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர் ஷியாம் தாஸ் பிரபு என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் சிறையில் உள்ள ஸ்ரீசின்மோய் கிருஷ்ண தாஸைச் சந்திக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன்பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறித்து அரசு தெரிவிக்கவில்லை.
இதுதொடர்பாக இஸ்கான் கொல்கத்தாவின் துணைத் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான ராதாரம் தாஸ், "மற்றொரு இந்துமத தலைவர் ஸ்ரீஷியாம் தாஸ் பிரபு சட்டோகிராம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வங்கதேசத்தில் அதிகரித்து வரும் சிறுபான்மையினருக்கான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்), அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்துக்களுக்கு எதிரான வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும். சின்மோய் கிருஷ்ண தாஸை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும். மேலும், பங்களாதேஷில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க இந்திய அரசு தனது முயற்சிகளைத் தொடர வேண்டும். அதற்கான உலகளாவிய ஆதரவை உருவாக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இக்கட்டான தருணத்தில், உலக அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் நலன் கருதி, இந்த அட்டூழியங்களை முடிவுக்குக் கொண்டுவர அந்தந்த அரசாங்கங்களை வலியுறுத்தும் வகையில், இந்தியா மற்றும் உலக சமூகம் வங்கதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒற்றுமையாக நிற்க வேண்டும்” என அதில் வலியுறுத்தியுள்ளது.