ஜெர்மனி, அமெரிக்கா எல்லை எக்ஸ் தளம்
உலகம்

Top 10 உலகம்: ராணுவ வீரர்களை அதிகரிக்கும் ஜெர்மனி To அமெரிக்கா மெக்சிகோ எல்லையில் குவிந்த அகதிகள்!

ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில், சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

Prakash J

ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில், சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

1. சிரியாவில் அமைதி துருக்கியும், லெபனானும் உறுதி

சிரியாவில் அமைதி நிலவ இணைந்து செயல்படுவது என துருக்கியும், லெபனானும் உறுதி பூண்டுள்ளன. இதுதொடர்பாக அங்காராவில் துருக்கி அதிபர் எர்டோகனும், லெபனான் பிரதமர் நஜிப் மிகாடியும் சந்தித்துப் பேசினர். அதில், சிரியாவில் அமைதி, ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவது இருநாடுகளின் பொறுப்பு என துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் லெபனானின் பாதுகாப்பு, காசாவில் நீடித்த அமைதி ஆகியவை பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு முக்கியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் பயங்கரவாதிகள், கிளர்ச்சியாளர்களுக்கு கொடுத்து வரும் அழுத்தத்தை இஸ்ரேல் நிறுத்த வேண்டுமென லெபனான் பிரதமர் நஜிப் மிகாடி வலியுறுத்தியுள்ளார்.

2. அர்ஜெண்டினா| சிறிய ரக விமானம் விபத்து

அர்ஜென்டினாவில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் சிக்கிய காட்சிகள் வெளியாகிவுள்ளன. பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தில் உள்ள சான் பெர்னான்டோ நகரில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது. வீடுகள், கட்டங்கள் மீது மோதியதில் விமானமும், சில வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் விமானியும், துணை விமானியும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா - மெக்சிகோ

3. அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் குவிந்த அகதிகள்

அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் குவிந்த அகதிகள் மீது எல்லைப் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். உலக அகதிகள் தினத்தையொட்டி மெக்சிகோ எல்லையை அமெரிக்கா திறப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ஏராளமானோர் சிஹூவாஹூவா நோக்கிப் படைத்தனர். அவர்களைத் தடுத்து நிறுத்தி திரும்பிச் செல்ல அமெரிக்கா எல்லை பாதுகாப்பு படையினர் எச்சரித்தனர். எனினும் அகதிகள் திரும்பி செல்லாததால், அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுவீசி பாதுகாப்புப் படையினர் கலைத்தனர்.

4. இஸ்ரேலைக் குறிவைத்து ஏமன் தாக்குதல்

ஏமன் நாட்டில் இருந்து ஹவுதி படையினர் இஸ்ரேல் தலைநகரை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தினர். ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இஸ்ரேலின் வான்பரப்பில் நுழைந்ததும், வான்பாதுகாப்பு அமைப்பு சைரனை ஒலிக்கச் செய்தது. இதையடுத்து மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்ககளில் தஞ்சம் அடைந்தனர். சில ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்து அழித்தாலும், ஒரு சில ஏவுகணைகள் கட்டடங்களைத் தாக்கியது. ஏமன் நடத்திய தாக்குதலில் மத்திய இஸ்ரேலில் உள்ள பள்ளிக்கூடம் உள்பட ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன.

5. கொலம்பியாவில் ஒன்றரை டன் கொக்கைன் பறிமுதல்

கொலம்பியாவில் ஒன்றரை டன் கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ஃப்யூனாவெண்டுரா கடற்பகுதியில் பயணித்த கப்பல் ஒன்று திடீரென விபத்தில் சிக்கியது. ஆழ்கடலில் தத்தளித்தவர்களை மீட்கச் சென்ற கொலம்பிய கடற்படையினர், கடல்நீரில் கருப்புநிற பார்சல்கள் மிதப்பதை கண்டறிந்தனர். சோதனையில், பார்சல்களில் போதைப்பொருட்களான கொக்கைன் இருப்பது தெரியவந்தது. அதுதொடர்பாக 3 பேரை கைது செய்த கொலம்பிய கடற்படையினர், 5 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைனை பறிமுதல் செய்தனர்.

6. ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஜெர்மனி

நேட்டோ அமைப்பின் பலத்தை அதிகரிக்கும் வகையில் புதிதாக 2 லட்சத்து 30 ஆயிரம் ராணுவ வீரர்களை படையில் இணைக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது. பன்டேஸ்வெர் என்ற ஜெர்மனியின் ராணுவ படையில் தற்போது ஒரு லட்சத்து 80 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமெடுத்து வரும் சூழலில், தனது படையிலுள்ள வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது. படைகள் மற்றும் ஆயுதங்களை 2025ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்க வேண்டுமென நேச நாடுகளுக்கு நேட்டோ அமைப்பு வலியுறுத்தியது. அதன்படி, படை வீரர்களின் எண்ணிக்கையை உயர்த்த ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது.

7. ”அணுஆயுத போருக்கு வழிவகுக்கும்” - ரஷ்யா

மேற்கத்திய நாடுகளின் செயல்கள் அணுஆயுத போருக்கு வழிவகுக்கும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய துணை வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி ரியாப்காவ். போர் மூளும் சூழலை தவிர்க்கவேண்டும் என்பதே ரஷ்யாவின் எண்ணம் என்றும், மேற்கத்திய நாடுகளின் செயல்கள் உலக பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதாகவும் விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

8. காஸாவில் தொடரும் தாக்குதல்: 24 மணிநேரத்தில் 38 பேர் பலி

காஸாவில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகள், குடியிருப்புப் பகுதிகள் ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் 203 பேர் காயமடைந்துள்ளதாகவும் காஸா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காஸாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 97 ஆக உயர்ந்துள்ளது. ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 244 பேர் இதுவரை காயமடைந்துள்ள நிலையில், காஸா மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

9. மொசாம்பிக்கில் மழை வெள்ளப் பாதிப்பு: மீட்கும் பணிகள் தீவிரம்

கிழக்கு ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில், மழை வெள்ளப் பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. சிடோ புயல் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கேபோ டெல்காடோ மாகாணத்தில் உள்ள பெம்பா என்ற பகுதி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இங்குள்ள 90 சதவீத வீடுகள் சேதமடைந்துள்ளதால், அப்பகுதி மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். மழை வெள்ள பாதிப்புகளில் சிக்கி 45 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மொசாம்பிக்

10. ஹோண்டா கார்ஸ் மற்றும் நிசான் மோட்டார் இணைப்பு?

ஜப்பானின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களான ஹோண்டா கார்ஸ் மற்றும் நிசான் மோட்டார் ஆகிய நிறுவனங்கள் இணையவிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதனை உறுதி செய்துள்ள ஜப்பானைச் சேர்ந்த ஊடகம், இணைப்பு பேச்சுவார்த்தை முதற்கட்டத்தை எட்டிவிட்டதாகவும் கூறியுள்ளது. ஜப்பான் சந்தையை டொயோட்டா மற்றும் டெஸ்லா போன்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆக்கிரமித்து வரும் சூழலில், தொழில் போட்டியை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் ஹோண்டா மற்றும் நிசான் இணைந்து புதிதாக ஒரு ஹோல்டிங் நிறுவனத்தை தொடங்கலாம் எனவும் தெரிகிறது. மேலும் இந்த இணைப்பில் பிரபல ஜப்பான் வாகன உற்பத்தி நிறுவனமான மிட்சுபிஷி மோட்டார்சும் இணைந்துள்ளது.