அமெரிக்காவின் தேசிய பறவையாக கழுகு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அதிபர் ஜோ பைடன் பிறப்பித்துள்ளார். அமெரிக்காவின் வலிமையை குறிக்கும் அடையாளமாக சுமார் 240 ஆண்டுகளாகவே கழுகு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் முத்திரையிலும் ஆவணங்களிலும் கூட இவ்வகை கழுகுகள் இடம் பெற்று வருகின்றன. அமெரிக்க அரசின் சின்னமாகவே பார்க்கப்பட்டு வரும் கழுகு தற்போது அதிகாரபூர்வமாக தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கழுகுகள் அமெரிக்காவில் மட்டுமே பெரும்பாலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
அணு மின்னுற்பத்தி நிலையம் கட்டுவதில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது குடும்பத்தினர் 500 கோடி டாலர் அளவுக்கு முறைகேடு செய்த குற்றச்சாட்டில் அந்நாட்டு அரசு விசாரணையை தொடங்கியுள்ளது. ஹசீனா பிரதமராக இருந்த போது ரூப்பூர் என்ற இடத்தில் ரஷ்ய நிறுவனத்தால் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டது. இதில் இந்திய நிறுவனங்களும் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டன. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜேத் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை தொடங்கியுள்ளது. முன்னதாக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு மத்திய அரசை வங்கதேசம் கேட்டுக்கொண்டிருந்தது.
அமெரிக்காவில் கொலைகாரர்கள், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் தனது ஆட்சியில் மரண தண்டனையிலிருந்து தப்ப முடியாது என அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். கொடூரமான மனிதர்களிடம் இருந்து மக்களை காப்பது தனது முக்கிய நோக்கங்களில் ஒன்று என தெரிவித்தள்ள அவர், அமெரிக்காவை சட்டம் ஒழுங்குமிக்க தேசமாக மாற்ற வேண்டும் என்பது தனது விருப்பம் என கூறியுள்ளார். மரண தண்டனை குற்றவாளிகளுக்கு மன்னிப்பு அளித்து தற்போதைய அதிபர் பைடன் அறிவித்த நிலையில் அதற்கு முரண்படும் வகையில் ட்ரம்ப் தன் சமூக தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்திற்குச் சொந்தமான வாகனத்தை தாக்கி அழிக்கும் வீடியோவை ஹமாஸ் படையினர் வெளியிட்டுள்ளனர். முகாம்களை அழிக்கும் பணிக்காக மேற்குக் கரை பகுதியில் ஏராளமான புல்டோசர்களை இஸ்ரேல் ராணுவம் நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புல்டோசரை வெடி வைத்து தாக்கி அழித்துள்ளதாக ஹமாஸ் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் தஞ்சம் அடைந்து இருக்கும் வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வேண்டும் என வங்கதேச அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவிலிருக்கும் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத், வங்கதேச அரசாங்கத்தின் மீது கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத முகமது யூனுஸின் இடைக்கால அரசாங்கம், வங்கதேச நீதித்துறையை ஆயுதம் தாங்கிய ஒன்றாக மாற்றி விட்டதாகவும், அதை வைத்து அவாமி லீக் கட்சித் தலைவர்களை வேட்டையாடத் துடிக்கிறது என்றும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
நேபாளத்தில் முதன் முறையாக ஹாட் ஏர் பலூன் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதை பொதுமக்கள் குழந்தைகளுடன் சென்று கண்டுகளித்தனர். மேளம் வாசித்தும், செல்போன் மூலம் புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். இதில் பல வண்ணங்களில், வித்தியசமான வடிவங்களில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இதில், 25 ஏர் பலூன்கள் பறக்க விடப்பட்டதாகவும், சுற்றுலாவை மேம்படுத்த இந்த திருவிழா நடத்தப்படுவதாகவும் இவ்விழாவின் அமைப்பாளர் தெரிவித்தார்.
காஸாவில் உள்ள மருத்துவமனைகளில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் நோயாளிகள் வெளியேற்றப்படும் சூழல் உருவாகி உள்ளதாக மருத்துவக் குழுவினர் வேதனை தெரிவிக்கின்றனர். காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் முகாம்களில் புகுந்து இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். மேற்குக் கரை பகுதியில் உள்ள முகாமில் நடத்திய தாக்குதலில் 7 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மருத்துவமனைகளில் புகுந்து நோயாளிகள் மற்றும் பொதுமக்களை இஸ்ரேல் ராணுவத்தினர் வெளியேற்றி வருவதால், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானின் சர்வதேச ஏர்லைன்சில் போலி சான்றிதழ்களுடன் இரண்டு விமானிகள் பல ஆண்டுகளாக பணியாற்றியதை எப்ஐஏ கண்டுபிடித்துள்ளது. பாகிஸ்தானின் இன்டர்நேஷனல் ஏர்லைன்சில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆய்வு நடந்தபோது இரண்டு விமானிகள் போலி பட்டப்படிப்புக்களின் அடிப்படையில் சேர்ந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. 1995 மற்றும் 2006ம் ஆண்டு முதல் முறையே கஷன் ஐஜாஸ் தோதி மற்றும் மொஹ்சின் அலி ஆகியோர் விமானிகளாக பணியாற்றி உள்ளனர். இதுதொடர்பாக புலனாய்வு ஏஜென்சி மேற்கொண்ட விசாரணையில் இரண்டு விமானிகளின் சான்றிதழும் போலியானவை என்பது உறுதியானது. இதுதவிர மேலும் இருவர் போலிச் சான்றிதழ் கொடுத்து பணிக்குச் சேர்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
நெதர்லாந்தைச் சேர்ந்த ஹெரி ஜானிஸ் வென் ஹுர்டன் ரஷ்யாவில் வசித்து வந்தார். இவர், கடந்த அக்டோபர் மாதம் மாஸ்கோவில் போக்குவரத்து சிக்னலுக்கு வைக்கப்பட்டிருந்த பலகையை உடைத்த தகராறில், போலீசாருக்கும் ஹெரிவுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது, ரஷ்ய போலீஸ்காரரை ஹெரி கீழே தள்ளிவிட்டார். மேலும், அவரது முகத்தில் தாக்கியுள்ளார். இதையடுத்து, ஹெரியை கைதுசெய்த ரஷ்ய போலீசார் அவரை மாஸ்கோவில் வீட்டுக் காவலில் வைத்தனர். மேலும், அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், போலீஸ்காரரை கீழே தள்ளிவிட்ட வழக்கில் ஹெரிவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ரஷ்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது, இருநாடு உறவில் விரிசலை ஏற்படுத்தும் என தெரிகிறது.
ரஷ்யாவின் அபரான்லாஜிஸ்டிகா நிறுவனத்துக்குச் சொந்தமான உா்சா மேஜா் சரக்குக் கப்பல் அந்த நாட்டின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகர துறைமுகத்திலிருந்து கடந்த 11ஆம் தேதி புறப்பட்டது. அந்தக் கப்பல், ஸ்பெயினுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையிலுள்ள கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அதன் என்ஜின் அறையில் வெடிவிபத்து ஏற்பட்டது. அதனைத் தொடா்ந்து, அந்தப் பகுதிக்கு மீட்புக் கப்பல்களையும், ஹெலிகாப்டா்களையும் ஸ்பெயின் அனுப்பி, கப்பலில் சிக்கியிருந்த 16 பணியாளா்களில் 14 பேரை மீட்டது. எஞ்சிய இருவரைக் காணவில்லை. பின்னா் அந்தக் கப்பல் கடலுக்குள் முழுவதுமாக மூழ்கியது.