ட்ரம்ப், எலான் மஸ்க் புதிய தலைமுறை
உலகம்

Top10 உலகச் செய்திகள் | புதிய உச்சத்தை எட்டிய மஸ்க் சொத்து மதிப்பு To ரீல்ஸ் மோகத்தால் பலியான பெண்!

ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில் சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

Prakash J

ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில் சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

1. தென்கொரியா அதிபருக்கு எதிராக மீண்டும் தீர்மானம்

தென்கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டம் அண்மையில் கொண்டுவரப்பட்ட நிலையில், கடும் எதிா்ப்புக்கு பின்னா் திரும்பப் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து தென்கொரிய அதிபரை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தன. ஆனால் அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஆளுங்கட்சியினர் புறக்கணித்ததால், தீர்மானம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் இணைந்து புதிய தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.

2. இஸ்ரேல் தாக்குதலில் 28 பேர் பலி

இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டிய நிலையிலும், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் இன்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 குழந்தைகள், 1 பெண் உள்பட 28 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இருதரப்பிலும் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

3. அமெரிக்கா ராணுவ பட்ஜெட்டிற்கு 884 பில்லியன் டாலர்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான ராணுவ பட்ஜெட்டிற்கு 884 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்வதற்கான தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், அடுத்ததாக செனட் சபையின் ஒப்புதலுக்காக இந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்படும். ராணுவ ஊதியத்தை அதிகரிப்பது, நாட்டின் பாதுகாப்புத் துறையை வலுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் ராணுவ பட்ஜெட்டில் இடம்பெற உள்ளன.

4. ஒரேநாளில் 200 வீரர்களை இழந்த உக்ரைன்

உக்ரைன் ஆயுதப் படைகள் குர்ஸ்க் பகுதியில் கடந்த நாளில் 200க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. மொத்தத்தில், ’உக்ரைன் குர்ஸ்க் பகுதியில் தாக்குதலின்போது இதுவரை 40,060 க்கும் மேற்பட்ட வீரர்களையும், 236 பீரங்கி டாங்கிகளையும் இழந்துள்ளது’ என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க்

5. 400 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை எட்டிய எலான் மஸ்க்!

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, உலக வரலாற்றில் 400 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் உயர்ந்ததால், எலான் மஸ்க்கின் மதிப்பு அதிகளவில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீட்டின்படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் மிகவும் அதிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

6. சிரியாவின் முன்னாள் அதிபரின் கல்லறை சேதாரம்

சிரியா நாட்டின் முன்னாள் அதிபரும், தற்போது தப்பியோடிய அதிபர் பஷார் அல் அசாத்தின் தந்தையுமான ஹஃபேஸ் அல் அசாத்தின் கல்லறை, கிளர்ச்சிப் படையினரினால் தகர்க்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது. அழகிய கட்டடக்கலையில் கட்டப்பட்ட அவரது குடும்ப நினைவகம் தற்போது கிளர்ச்சிப்படையனரால் சேதாரப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, சிரியாவைக் கைப்பற்றிய கிளர்ச்சிப் படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

7. இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்

அண்டை நாடான வங்கதேசத்தில், சமீபகாலமாக இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் மேத்யூ மில்லர், ‘இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் பேச்சு நடத்தி அமைதியான முறையில் பிரச்னைகளுக்கு தீா்வுகாண வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

8. ஒரே நாடு ஒரே தேர்தல் - வெற்றிகரமான 7 நாடுகள்

டெல்லியில் இன்று, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, உலகளாவிய ஆராய்ச்சியின் போது, ​​தென்னாப்பிரிக்கா, ஸ்வீடன், பெல்ஜியம், ஜெர்மனி, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய ஏழு நாடுகளில் குழு கவனம் செலுத்தியது. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தி வெற்றிகரமாகச் செய்து வருகின்றன.

9. ரீல்ஸ் மோகத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்

சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது ரயிலில் பயணித்தபோது அந்தப்பெண் ரயிலுக்கு வெளியே தலையை நீட்டி ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்துள்ளார். அந்தச் சமயத்தில் ஒரு மரத்தில் மோதி அப்பெண் கீழே விழுந்தார். ஆனாலும் அதிர்ஷ்டவசமாக அப்பெண் ஒரு புதருக்குள் விழுந்ததால் காயமின்றி உயிர் தப்பினார். இந்த அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

10. 1,500 பேரின் தண்டனைகளைக் குறைத்த ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் பதவி விலக உள்ள நிலையில், ஒரேநாளில் சுமார் 1,500 பேரின் தண்டனைகளை குறைத்துள்ளார். அதில், வன்முறையற்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 39 நபர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் அதிக நபர்களுக்கு கருணை காட்டப்பட்டுள்ளது.