இனாசியோ லூலா, ராஜேந்தர் மேக்வார், ஹர்மீத் தில்லான் x page
உலகம்

Top 10 உலகம் | பிரேசில் அதிபருக்கு ஆபரேஷன் முதல் பாகிஸ்தானில் முதல் இந்து போலீஸ் அதிகாரி வரை!

ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில் சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

Prakash J

ஒவ்வொரு நாளும் உலகில் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் வெளியாகி வருகின்றன. அதில் சில முக்கியமான உலகச் செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.

1. பிரேசில் அதிபருக்கு மூளையில் அறுவைச்சிகிச்சை

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவுக்கு மூளையில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூளையில் ரத்த உறைதல் பாதிப்பால் கட்டி உருவாகியிருந்த நிலையில், அவருக்கு சா பாலோ நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 79 வயதான டா சில்வா கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தலைநகர் பிரேஸிலியாவில் உள்ள அதிபர் மாளிகையில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் உண்டானது குறிப்பிடத்தக்கது.

2. பாகிஸ்தானின் முதல் இந்து போலீஸ் அதிகாரி

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள பொருளாதார ரீதியாக பின்தங்கிய கிராமமான பாதின் பகுதியைச் சேர்ந்த ராஜேந்தர் மேக்வார். பாகிஸ்தானில் சிறுபான்மையினராக வாழும் இந்து சமூகத்தைச் சேர்ந்த இந்த இளைஞர், அந்நாட்டின் குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பெருநகரங்களில் ஒன்றான ஃபைசலாபாத்தின் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டிருப்பது பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையின சமூகங்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

3. தென்கொரிய அதிபா் வெளிநாடு செல்லத் தடை!

தென்கொரிய அதிபா் யூன் சுக் இயோல் வெளிநாடுகளுக்குச் செல்ல அந்த நாட்டு நீதித் துறை தடை விதித்துள்ளது. அவருக்கு எதிராக பல்வேறு விசாரணைகள் நடைபெற்று வருவதால் அவா் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது என்று காவல் துறை, அரசு வழக்காடு துறை, ஊழல் தடுப்பு அமைப்பு ஆகியவை கோரிக்கை விடுத்தன. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம், நாட்டில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்த அவர், அதற்கு நாடு முழுவதும் மிகக் கடுமையான எதிா்ப்பு எழுந்ததால் ஆறு மணி நேரத்தில் அந்த அறிவிப்பை அவா் திரும்பப் பெற்றாா். இதையடுத்தே அவர்மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

4. டோங்கா ராஜியத்தின் பிரதமர் ராஜினாமா

தெற்கு பசிபிக் பெருங்கடலிலுள்ள தீவு நாடான டோங்கா ராஜியத்தின் பிரதமர் சியாவொஸி சொவாலேனி நேற்று காலை பதவி விலகினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொவாலேனி தாமாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இன்னும் சில மாதங்களில் டோங்கா நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5. இந்திய வம்சாவளி பெண்ணுக்கு உயர்பதவி

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். இதற்கிடையே தனது ஆட்சியில் இடம்பெறக்கூடிய அமைச்சர்களையும் உயர் அதிகாரிகளையும் அறிவித்து வருகிறார். அந்த வகையில், அமெரிக்க நீதித்துறையின் உயர் பதவிகளில் ஒன்றாக விளங்கும் சிவில் உரிமைகளுக்கான துணை தலைமை வழக்கறிஞர் பதவிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்மீத் தில்லான் என்பவரை நியமனம் செய்வதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். 54 வயதாகும் ஹர்மீத் தில்லான், இந்தியாவின் சண்டிகர் நகரில் பிறந்தவராவார். சிறுவயதிலேயே அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த இவர், அங்கேயே படித்து வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார்.

6. ஜப்பானில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் சரிவடைந்துள்ளது. 2022-ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் 5.6 சதவீதம் குறைந்து 727,277 ஆகப் பதிவானது. ஆகவே, ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் நடைமுறையை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அரசு அலுவலகங்களில் கொண்டு வரப்பட உள்ளதாக டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்கே அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

7. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம்

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன் பொருட்களுக்கான தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரிசி, வெங்காயம், தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களுக்கான விலை உயர்ந்துள்ளது. இலங்கையில் புதிதாக ஆட்சி பீடம் ஏறியுள்ள தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு இது மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனினும், இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர அரசாங்கம் கடந்த நவம்பர் மாதம் முதல் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் 200 ரூபாவிற்கு (இலங்கை ரூபாய்) விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ நாட்டரிசி தற்போது 260 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது கவனிக்கத்தக்கது.

8. புலம்பெயர்ந்தவர்களுக்காக துருக்கி எல்லைகள் திறப்பு

சிரியாவிற்கு திரும்பும் புலம்பெயர்ந்தவர்களுக்கு துருக்கியின் எல்லைகள் திறந்திருக்குமென அதிபர் தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். சிரியாவின் உள்நாட்டு போர் காரணமாக கடந்த 2013ஆம் ஆண்டு துருக்கியின் யைலடகி எல்லை மூடப்பட்டது. தற்போது சிரியாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளதால், புலம்பெயர்ந்த சிரியர்கள் சொந்த நாடு திரும்பி வருகின்றனர். இதற்காக துருக்கி எல்லையில் அவர்கள் குவிந்து வரும் சூழலில், புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவும் வகையில் யைலடகி எல்லையை திறக்கப் போவதாக துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார். அதேசமயம் சிரியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட துருக்கி விரும்பவில்லை என்றும், அவர்களது எதிர்காலத்தை சிரிய மக்களே தேர்ந்தெடுப்பார்கள் எனவும் எர்டோகன் கூறியுள்ளார்.

9. வெளிநாடுகளில் தொடங்கிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் உலக நாடுகளில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இந்தோனேசியா தலைநகர் மணிலாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு கட்டடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. நகரில் உள்ள வணிக வளாகங்களில் கிறிஸ்துமஸ் தொடர்பான பாடல்கள், இசைகள் ஒலிக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாலைகள், பூங்காக்கள் என காணும் இடமெல்லாம் வண்ண விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறது. நகரின் முக்கிய பகுதிகள், மரங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சிறுவர்களை கவரும் வகையில் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் கொண்ட உருவச் சிலைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

10. இந்தியா வரும் இலங்கை அதிபர்

இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக 2 நாள் பயணமாக வரும் 15ஆம் தேதி இந்தியா வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை அதிபராக பதவியேற்ற பின் திசநாயக மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இந்த பயணத்தின் போது குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை அதிபர் திசநாயக சந்திப்பார் என இலங்கை அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் நளிந்த ஜெயதிசா தெரிவித்தார். இரு நாட்டு பொருளாதார, பாதுகாப்பு ரீதியிலான உறவுகள் குறித்தும் குறிப்பாக இலங்கைத் தமிழர் நலன் குறித்தும் இச்சந்திப்புகளின் போது பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது