குறைந்த அளவிலான நேரம் மட்டுமே உள்ள வீடியோக்களைப் பதிவு செய்து வெளியிடும் செயலிகளில் டிக் டாக் (TikTok) முக்கியமானது. இதன்மூலம் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர்கள் அதிகம். குறிப்பாக, இந்தச் செயலி இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு இந்தச் செயலிக்கு தடை விதித்தது. இந்தியாவின் தகவல் பாதுகாப்பு காரணங்களுக்காக சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் (Bytedance) நிறுவனத்தை சேர்ந்த இந்த `டிக்டாக்’ செயலி தடை செய்யப்பட்டது. இதற்குப் பிறகு அமெரிக்காவில் 17 கோடிக்கு அதிகமானோர் டிக்டாக் செயலியை பயன்படுத்தும் நிலையில், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்த செயலிக்கு முந்தைய ஜோ பைடன் அரசு தடை விதித்தது. மேலும், டிக்டாக் செயலியை தடை செய்வதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டமும் இயற்றப்பட்டது. தொடர்ந்து, டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் சட்டத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்துசெய்ய மறுத்துவிட்டதால், அந்தச் செயலிக்கு தடை விதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்தன.
இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், டிக்டாக் சேவையை வழங்குவதற்கு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, அமெரிக்காவில் டிக்டாக் செயலி மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதற்கிடையே, டிக்டாக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது. மேலும், டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்பதற்கு அதிபர் ட்ரம்ப் அனுமதி வழங்கியிருந்தார். இதற்காக டிக்டாக் செயலிக்கு 75 நாள்கள் கால அவகாசமும் அளித்திருந்தார். அந்த நீட்டிப்பு ஏப்ரல் 5ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, ஆரக்கிள், வால்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பைட் டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்த நிலையில் டிக்டாக் விவகாரம் குறித்து அதிபர் ட்ரம்ப், ”டிக்டாக்கை வாங்க நான்கு குழுமங்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும், பல நிறுவனங்களும் டிக்டாக்கை வாங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், இறுதி முடிவு எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதை சீனாவும் ஒப்புக்கொள்ளும். இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.