கோப்புபடம் Reuters
உலகம்

கண்ணிவெடியில் சிக்கிய 3 கப்பல்கள்? ஈரான் அறிவித்த முக்கிய முடிவு!!

ஈரான் அனுமதிக்காத தெற்குப் பகுதி கடல்வழிப் பாதையில் இந்தக் கப்பல்கள் பயணித்ததாகவும், அப்போது ஈரான் கடற்படையின் எச்சரிக்கையை மீறியதாகவும் அந்நாட்டு ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

Premkumar S

உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான கடல்வழிப் பாதையாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இந்தப் பாதையில் பயணித்த 3 எண்ணெய் கப்பல்கள் கடலில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளில் சிக்கி வெடித்துத் தீப்பிடித்துள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஹார்முஸ்

குறிப்பாக, ஈரான் அனுமதிக்காத தெற்குப் பகுதி கடல்வழிப் பாதையில் இந்தக் கப்பல்கள் பயணித்ததாகவும், அப்போது ஈரான் கடற்படையின் எச்சரிக்கையை மீறியதாகவும் அந்நாட்டு ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்தக் கப்பல்கள் தங்களது ரேடார் மற்றும் வழிகாட்டும் கருவிகளை அணைத்துவிட்டு பயணித்ததாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சேதமடைந்த 3 கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தியின் தெற்குப் பகுதியில் கைவிடப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்தச்சம்பவத்தை பிரிட்டன் ராணுவத்தின் கண்காணிப்புக்குழு உறுதிப்படுத்தியிருக்கிறது.

அதேசமயம், இந்தக்கப்பலில் பயணித்தவர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. முன்னதாக, ஹார்முஸ் நீரிணையின் முக்கிய வழித்தடங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியிருந்த நிலையில் தான், இந்த கண்ணிவெடி தாக்குதலில் 3 கப்பல் எரிந்த சம்பவம் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையில், ஈரானின் நிபந்தனைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும், அந்தப் பகுதி தங்கள் ராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ஈரான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹேபி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஹொசைன் மொஹேபி

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஒருங்கிணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்தத்தாக்குதலில் ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட பல்வேறு ஈரான் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. அதன் ஒருபகுதியாக, உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸையும் மூடியிருக்கிறது. இதனால், எரிபொருள் விலை உலகளவில் கடுமையாக உயர்ந்திருக்கிறது.