செய்தியாளர் - கார்த்திகேயன்
பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் வழக்கத்திற்கு மாறாக நீர் வெப்பம் அடைவதை தான் எல் நினோ என்று அழைக்கிறார்கள். எல் நினோ உருவாகி இருப்பதால், உலக அளவில் இயல்பான மழைப்பொழிவு முறையில், மிகப்பெரிய சீர்குலைவு ஏற்படுகிறது. வறட்சி, மழைப்பொழிவு ஆகிய இரண்டும் ஒருசேர அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் வறட்சியும், தென் அமெரிக்காவில் உள்ள நாடுகளில் கடுமையான மழைப்பொழிவையும், எல்.நினோ ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ஏற்கனவே உள்ள எல்.நினோ சூப்பர் எல்.நினோவாக மாறியதால், கடலின் வெப்பம் அதிகமாக உயர்ந்து, ஒரே நேரத்தில் 3 சூறாவளிகள் உருவாகியுள்ளது. மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் லோவெல், கரினா, மேரி ஆகிய மூன்று சூறாவளிகள் ஒரே நேரத்தில் சுழன்று கொண்டிருக்கின்றன.
பசிபிக் கடலில் இப்படி ஒரே நேரத்தில் மூன்று சூறாவளிகள் உருவாவது மிகவும் அரிதான நிகழ்வாகும். இந்த 3 சூறாவளிகளில், லோவெல் அதிதீவிரமான, பேரழிவை ஏற்படுத்தும் 4-வது வகையை சேர்ந்தது என்றும், கரினா 3-வது வகையை சேர்ந்தது மற்றும் மேரி 2-வது வகையை சேர்ந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 சூறாவளிகளில் மிகவும் ஆபத்தான லோவெல், ஹவாய் தீவை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும், இது கவாய் தீவில் இருந்து சுமார் 950 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்றும், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த சூறாவளி ஹவாய் தீவுகளை நேரடியாகத் தாக்குமா அல்லது தீவுகளுக்கு மேற்கே விலகிச் செல்லுமா என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இருப்பினும், வார இறுதியில் திடீரென வடமேற்கு மற்றும் வடக்கு நோக்கித் திரும்பும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1 லட்சம் மக்கள் வசிக்கும் கவாய் தீவு லோவெல் சூறாவளியால் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஓஹு , மௌய் , பிக் ஐலண்ட் ஆகிய தீவுகளும் இதன் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும். ஹவாயை நெருங்கி வருவதால், கடலில் பெரிய அலைகளை இந்த சூறாவளி உருவாக்கத் தொடங்கியுள்ளது. வார இறுதியில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.