பூமியின் வட மற்றும் தென் துருவப் பகுதிகளுக்கு மேலே, வளிமண்டலத்தின் மேல் அடுக்குகளான ஸ்ட்ராட்டோஸ்பியரில் (Stratosphere) இருந்து ட்ரோபோஸ்பியர் (Troposphere) வரை சுழலும் பெரிய, அதிவேகக் காற்று சுழற்சி மண்டலம் அமைந்துள்ளது. இந்த காற்று சுழற்சியே துருவச் சுழல் (Polar Vortex) என அழைக்கப்படுகிறது.
இந்த துருவச் சுழல் வலுவாகவும் சீராகவும் இருக்கும்போது துருவப்பகுதிகளில் இருக்கும் தீவிரக் குளிர் பூமத்திய ரேகை பகுதியை நோக்கி நகராமல் குளிர்ந்த காற்றை துருவப்பகுதிகளிலேயே அடைத்து வைக்கிறது. அதேபோல வெப்ப காற்று துருவப்பகுதிக்கு நகராமலும் இந்த சுழல் ஒரு தடுப்பு மண்டலமாக அமைகிறது. ஆனால் இது பலவீனமடையும்போது துருவப்பகுதியில் இருக்கும் குளிர்ந்த காற்று, குறிப்பாக வடதுருவக் காற்று ஐரோப்பிய மற்றும் வடக்கு அமெரிக்க நாடுகளில் நுழைத்து அங்கு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், இந்த துருவ சுழல் பலவீனமடைந்து திசை மாறியுள்ளதாக பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நவம்பர் 11 முதல் 17-ம் தேதி வரை நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாகவும், தற்போது ஸ்ட்ராட்டோஸ்பியரில் நிலவும் இந்த பாதிப்பு கீழ்மட்டத்தை எட்டும்போது அதன் பாதிப்பு முழுமையாக தெரியவரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு வெளியில் தெரிய பொதுவாக இரண்டு முதல் ஆறு வாரங்கள் வரை ஆகலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதன் காரணமாக வட அட்லாண்டிக், கிரீன்லாந்து அல்லது ஸ்காண்டிநேவியா பகுதிகளில் சக்திவாய்ந்த குளிர்கால புயல்கள் வீசக்கூடும் என்றும், வழக்கத்தை விட இந்த பகுதிகளில் பனிப்பொழிவு, வெப்பநிலை குறைதல் போன்ற பாதிப்பு ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல, கனடா, வடக்கு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் இதன் தாக்கம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதோடு, இதன் பாதிப்பு மத்திய தரைக்கடல் வரை இருக்கலாம் என்றும், குளிர்காலம் முடிவடைந்து அடுத்த கோடை வரை இதன் தாக்கம் இருக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் சமீபத்தில் வெளியான ஆய்வுகளில் ஸ்ட்ராட்டோஸ்பியரில் இந்த துருவ சுழல் மீண்டும் வேகமாகச் சீரடையும் அறிகுறிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.