Delhi NEET protests   x page
உலகம்

நீட் போராட்டத்தின் முகமான சிங்கப் பெண்கள்.. அதிரும் காவல்துறை.. பங்கு என்ன?

டெல்லி நீட் போராட்டங்களில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பங்கேற்று வருவது போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

Praveen Joshva L

நீட் தேர்வில் பல ஆண்டுக்காலமாக முறைகேடு புகார்கள் எழுந்த சூழலில், இந்த விவகாரத்தில் நீதிமன்றமே தலையிட்டு விசாரணை நடத்தியது. தொடர்ந்து நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், அதிலும் முறைகேடு புகார்கள் எழுந்தது மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தை முன்வைத்து டெல்லியில் கரப்பான் ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இந்தப் போராட்டத்தைக் கலைக்க டெல்லி போலீசார் தடியடி நடத்திய சூழலில் அதுதொடர்பான படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக பரவின.

இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நீட் எதிர்ப்புப் போராட்டம் விரிவடைந்தது. பல கல்லூரிகளிலும் மாணவர்கள் இந்த நீட் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த மாணவர் போராட்டங்களில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் பங்கேற்று வருவது போராட்டத்தை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

அதிலும், டெல்லியில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய நிலையில், அதனை தைரியமாக பெண்கள் எதிர்கொண்டனர். அதோடு தங்கள் சக தோழர்களைக் காவல் துறையினர் தாக்கும்போதும் அதனைத் தடுக்கும் கவசமாகவும் பெண்கள் செயல்பட்டனர். போராட்டத்தை ஒடுக்க காவல் துறையினர் முயன்றபோதெலாம் காவல்துறையினரை தீவிரமாக எதிர்த்து அவர்களைப் பின்வாங்கச் செய்ததில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

அதிலும் குறிப்பாக, டெல்லி சிவாஜி பார்க் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது ரியா ஆகிர் என்ற இளம்பெண் காவல் துறை வாகனத்தைத் தனியாளாக மறித்து கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வைத்தார். அவரின் இந்தச் செயல் இணையத்தளத்தையே உலுக்கியுள்ளது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில், போராட்டக்களத்தில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்கும் நிலையில், சானிடரி நாப்கின் போன்றவையும் வழங்கப்பட்டு வருகிறது. இரவு பகல் பாராது போராட்டக் களத்துக்கு பெண்கள் வருகை தரும் நிலையில், பல இடங்களில் போராட்டங்களை பெண்களே முன்னெடுத்தும் வருகின்றனர். இந்த வகையில், தற்போது நடைபெற்றுவரும் நீட் எதிர்ப்பு போராட்டம் பெண்களின் பங்களிப்போடு வரலாற்றின் முக்கியமான போராட்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது.