வாரன் பஃபெட் Pt web
உலகம்

முடிவுக்கு வந்த சகாப்தம்.. உலக முதலீட்டாளர்களின் முன்னோடி வாரன் பஃபெட் ஓய்வு.!

முதலீட்டு தொழிலதிபர் வாரன் பஃபெட் 60 ஆண்டுகளாக தான் வகித்து வந்த தனது "பெர்க்ஷயர் ஹாத்வே" நிறுவன தலைமை பதவியிலிருந்து கடந்த 31ஆம் தேதியோடு ஓய்வு பெற்றிருக்கிறார். முதலீட்டுத்துறையில் உலக ஜாம்பவனான இவரது பின்னணியை பற்றி திரும்பிப்பார்க்கலாம்.

PT WEB

வாரன் பஃபெட் ஒரு ஆன்மிகவாதியோ, அரசியல்வாதியோ, ஒரு நாட்டின் தலைவரோ, சினிமா நட்சத்திரமோ, விளையாட்டு வீரரோ அல்ல. ஆனாலும் உலகில் கோடிக்கணக்கானவர்களுக்கு இவர் குரு.... ரோல் மாடல்.... கொண்டாடப்படும் ஹீரோ... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

வாரன் பஃபெட்

பங்குச்சந்தைகளில் சிறிய தொகையை முதலீடு செய்து அதை உட்கார்ந்த இடத்திலிருந்தே கோடிகளாக மாற்றும் வித்தை தெரிந்தவர். அதே நேரம் குறைத்து மதிப்பிடப்பட்டப்பட்ட சிறந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கி நீண்ட காலம் வைத்திருந்து மிகப்பெரிய லாபம் ஈட்டும் யுக்தி முதலீட்டாளர்களுக்கு இவர் அளித்த முக்கிய பாடங்களில் ஒன்று. பங்குச்சந்தைகளில் பல கோடி பேர் இன்று பணக்காரராக மாறியதற்கு இவரது வழிகாட்டுதல்களும் ஒரு காரணம். பெரிதாக மெனக்கெடாமல் மூளையை மட்டுமே முதலீடாக வைத்து பணத்தை குவித்த வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு சுமார் 15 லட்சம் கோடி ரூபாய்.

உலகின் டாப் 5 பணக்காரர்கள் பட்டியலில் இருந்தவர். இவரது நிறுவனத்தின் சொத்து மதிப்பு பல நாடுகளின் பொருளாதார மதிப்பை விட அதிகம். உலக மகா கோடீஸ்வரராக இருந்தாலும் எளிமைதான் இவரது மிகப்பெரிய பலம். பங்குச்சந்தை முதலீட்டில் சம்பாதித்த பணத்தில் 99 சதவீதத்தை சமூக நலனுக்கே செலவிட்டவர். பிற தொழிலதிபர்களையும் ஏழை எளிய மக்களுக்காக செலவிட செய்தவர். ஊதியம் மட்டுமே உங்கள் வருவாய் என்றால் நீங்கள் ஏழ்மைக்கு மிக அருகில் உள்ளீர்கள் என்ற இவரது அறிவுரை மிகவும் பிரபலமானது. நீங்கள் தூங்கும் போதும் கூட உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க வேண்டும் என்று கூறியவர். மற்றவர்கள் பேராசையுடன் இருக்கும் போது நீங்கள் அச்சப்பட வேண்டும். பிறர் அச்சத்தில் இருக்கும்போது நீங்கள் பேராசைப்பட வேண்டும் என்பது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு இவரது பொன்னான அறிவுரை.