rohingya muslims mass killings Reuters
உலகம்

மக்களை இனப்படுகொலை செய்கிறது : சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு... இந்தியாவின் அண்டை நாட்டுக்கு சிக்கல் !

மியான்மர் அரசு சிறுபான்மை மக்களை படுகொலை செய்ததற்கு ஆதாரம் இருப்பதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Praveen Joshva L

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரின் மேற்குப் பகுதியில் உள்ள ராகைன் (Rakhine) மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இஸ்லாமியர்கள் ரோஹிங்கியா முஸ்லிம்கள் (Rohingya Muslims) என்று அழைக்கப்படுகிறார்கள். மியான்மரில் 1982-ம் ஆண்டு ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டபோது ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லி அவர்களின் குடியுரிமை நிராகரிக்கப்பட்டது.

rohingya muslims

இதன் காரணமாக அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறினர். அவர்களுக்கான அனைத்து உரிமைகளும் அரசால் மறுக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களை நாட்டில் இருந்து வெளியேற்ற மியான்மர் ராணுவ அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

தங்கள் மீதான அடக்குமுறைகளை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு ARSA எனப்படும் ரோஹிங்கியா ஆயுதக் குழு மியான்மர் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டத்தை தொடங்கியது. இதனைக் காரணமாக வைத்து மியான்மர் ராணுவம் ராகைன் மாநிலத்தில் மிகத் தீவிரமான தாக்குதலை நடத்தியது. ஆயிரக்கணக்கான கிராமங்கள் எரிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியாக்கள் அண்டை நாடான வங்கதேசத்திற்குத் தப்பிச் சென்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளும் ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசு இனப்படுகொலை செய்வதாக கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஐ.நா அமைப்பும் இந்த செயலை இனப்படுகொலை என்றே கூறி வருகிறது.

இந்த சூழலில் மியான்மர் அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கடந்த 2019 ஆம் ஆண்டு நெதர்லாந்து தலைநகர் தி ஹேக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் 1948 ஆம் ஆண்டு இனப்படுகொலை தடுப்பு ஒப்பந்தத்தை மியான்மர் மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், நேற்று இறுதித்தீர்ப்பு வெளியானது. அதில் 10,000-க்கும் அதிகமான ரோஹிங்கியா மக்களை மியான்மர் அரசு கொலை செய்ததற்கு ஆதாரம் இருப்பதாகவும், மியான்மர் ராணுவம் ரோஹிங்கியா மக்களின் ஒரு பகுதியை அழிக்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதே போல மியான்மர் அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கி, அகதிகளாக சென்றவர்களை திரும்ப அழைத்துக்கொள்ளவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச அளவில் இது முக்கியமான தீர்ப்பாக கருதப்பட்டாலும் இந்த தீர்ப்பு மியான்மர் அரசை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்பதே நிதர்சனமாக உள்ளது. இதற்கு முன்னர் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பல்வேறு நாடுகளும் ஒரு பொருட்டாகவே கருதாத நிலையில், தனது தீர்ப்பை செயல்படுத்தும் வலிமை சர்வதேச நீதிமன்றத்துக்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.