அமெரிக்காவில் ஒரு மாதத்துக்கும் மேலாக அரசு முடங்கியுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே இவ்வளவு
காலம் அரசு முடக்கத்தில் இருப்பது இதுவே முதன் முறை.
அமெரிக்க மத்திய அரசு, அதன் செயல்பாடுகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் மூலம் நிதி ஒதுக்கீடு பெற வேண்டும். அமெரிக்காவில் நிதி ஆண்டு அக்டோபர்1 முதல் தொடங்கும். எனவே, அதற்குள் நிதி ஒதுக்கீட்டு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்று நிறைவேற்ற வேண்டும். ஆனால், இந்த முறை நிதி ஒதுக்கீட்டில் ஆளும் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயக் கட்சிக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
குறிப்பாக, லட்சக்கணக்கான மக்களுக்கு சுகாதாரக் காப்பீட்டு மானியங்களை நீட்டிக்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் கோருகின்றனர். இதற்கு அதிபர் ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சியினர் உடன்பட மறுக்கின்றனர்.
அமெரிக்க அரசு இயங்கத் தேவையான ஆண்டு செலவின மசோதாவுக்கு இந்த இரு அவைகளின் உறுப்பினர்களும் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, 60 சதவீத செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அரசின் செலவினங்களுக்கான நிதி விடுவிக்கப்படும். ஆனால், அமெரிக்காவின் மேலவையான செனட் அவையில், செலவீனங்களுக்கான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
அக்.1ல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 60% உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்காததால் நிதி மசோதா தோல்வியடைந்தது. இதன் காரணமாக அரசு துறைகளில் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால், அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. மேலும், அரசாங்கத்தை தொடர்ந்து செயல்பட வைப்பதற்கான பல நிதி மசோதாக்களில் செனட்டில் குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் உடன்படாததால் அமெரிக்க அரசாங்கத்தின் பெரும் பகுதி கடந்த அக்டோபர் 1 முதல் மூடப்பட்டது.
அமெரிக்காவில் ஒரு மாதத்துக்கும் மேலாகவே அரசு முடங்கியுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே இவ்வளவு காலம் அரசு முடக்கத்தில் இருப்பது இதுவே முதன் முறை. 1981 முதல் அமெரிக்க அரசாங்கத்தில் 15 முறை இதுபோன்ற பணி நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
மறுபுறம், அரசு முடக்கத்தால் விமானச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தேசியப் பூங்கா தளங்களும் செயல்பாடுகளைக் குறைத்து வருகின்றன. ஸ்மித்சோனியன் அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளன. ஐஆர்எஸ் கிட்டத்தட்ட பாதி ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதனால் வரி செலுத்துவோர் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதுபோக, 1 மில்லியனுக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்கிறார்கள். சுமார் 6,00,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, பல லட்சம் பேர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த முடக்கத்தால் வாரத்துக்கு 15 பில்லியன் டாலர் அமெரிக்க பொருளாதாரத்தில் இழப்பு ஏற்படுகிறது. ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம் தடைபட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்று அரசு துறைகள் முடங்குவது வழக்கம் என்றாலும், இம்முறை ஒரு மாதத்துக்கும் மேலாக அரசு சேவைகள் தடைபட்டு இருப்பது மக்களிடையே மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.