ஓமனை புரட்டிப் போட்ட ஷாஹீன் புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
புயல் கரையை கடந்தாலும், தொடரந்து கனமழை நீடிக்கும் என ஓமன் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், பள்ளத்தாக்குகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் கரையை கடந்தபோது, மணிக்கு 120 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. கடல் அலைகளும் 32 அடி உயரத்திற்கு எழும்பியதால், மக்கள் அச்சமடைந்தனர். கனமழையால் கடலோர மாகாணங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. சில பகுதிகளில் 500 மில்லி மீட்டர் வரை மழை பதிவாக வாய்ப்பு இருப்பதால், பாதுகாப்பான இடங்களுக்கு மக்களை அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.