North korea x page
உலகம்

வம்பிழுத்த எல்லை நாடு.. ட்ரோன்கள் பறந்ததால் அதிர்ச்சி.. கொதித்தெழுந்த வடகொரியா!

வடகொரியாவின் மீது ட்ரோன்கள் பறந்தது தொடர்பான விவகாரத்தில் வடகொரிய அரசு கடுமையான நிலைப்பாட்டை எடுத்த நிலையில், தென்கொரிய அதிபர் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Praveen Joshva L

வடகொரியா கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கத்திய நாடுகளின் தடைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் தற்போதுவரை பகையை தொடர்ந்து வருகிறது. மேலும், அந்த பகுதியில் உள்ள நாடுகள் அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பின் கீழ் உள்ளதால், வடகொரியா பாதுகாப்பை அதிகரிக்க தனது ராணுவ பலத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஒரு கட்டத்தில் வடகொரியா அணு ஆயுதங்கள் கொண்ட நாடாக மாறியதுடன், அமெரிக்காவையே தாக்கும் அளவு தங்கள் ஏவுகணை பலத்தை அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களால் தற்போது அமெரிக்காவே சற்று நடுங்கும் நாடாக வடகொரியா திகழ்ந்து வருகிறது.

இந்தச் சூழலில், ட்ரோன் சம்பவம் ஒன்றுக்காக வடகொரியாவிடம் தென்கொரிய அதிபர் வருத்தம் தெரிவித்துள்ளது உலகளவில் பரபரப்பு செய்தியாகியுள்ளது. கடந்த ஜனவரியில் வடகொரியத் தலைநகர் பியோங்யாங்கிற்கு மேல் தென்கொரிய ட்ரோன்கள் பறந்து துண்டுப் பிரசுரங்களை வீசியதாக வடகொரியா குற்றமசாட்டியிருந்தது.

வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம், மீண்டும் இது போன்ற ஊடுருவல் நடந்தால், எந்த எச்சரிக்கையுமின்றி தென்கொரியா மீது நேரடி ராணுவத் தாக்குதல் நடத்தப்படும் என்றும் மிரட்டல் விடுத்திருந்தது. அதோடு இந்த சம்பவத்தை வடகொரியா தனது நாட்டின் இறையாண்மை மீதான நேரடித் தாக்குதல் என்றும் கூறியிருந்தது.

இந்த சம்பவம் குறித்து முதலில் தென்கொரியா மறுத்தாலும் பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணையில் இந்த ட்ரோன் ஊடுருவலுக்குப் பின்னால் தென்கொரியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (NIS) மற்றும் சில ராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தது விசாரணையில் உறுதியானது.

இதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் இதில் ஈடுபட்டிருந்ததை விசாரணை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ள தென்கொரிய அதிபர் லீ ஜே-மியுங், இந்த செயலுக்காக வடகொரியாவிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இது தங்கள் அரசாங்கத்தின் நோக்கமாக இல்லாவிட்டாலும், ஒரு சில தனிநபர்களின் பொறுப்பற்ற மற்றும் கவனக்குறைவான செயல்களால் தேவையற்ற இராணுவப் பதற்றங்கள் ஏற்பட்டதற்காக வட கொரியாவிடம் வருத்தத்தை தெரிவித்ததாக அமைச்சரவைக் கூட்டத்தின்போது அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் வெளியிட்ட அறிக்கையில், அதிபர் லீ-யின் இந்த அணுகுமுறையை நேர்மையான மற்றும் பரந்த மனப்பான்மை கொண்ட வெளிப்பாடு என்று கிம் பாராட்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.