
அமெரிக்கா - தென் கொரியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரிய அதிபர் லீ ஜே மியூங் உடன் இரவு விருந்தில் பங்கேற்ற அதிபர் ட்ரம்ப், தென் கொரியா உடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.
மேலும் அணு ஆயுத சக்திகொண்டுள்ள வட கொரியா உடனான பிரச்சினைகளுக்கும், தென் கொரியாவுக்கு அமெரிக்கா நேரடியாக உதவும் எனவும் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய தென் கொரிய அதிபரின் ஆலோசகர் கிம் யாங் பியூம், வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். எனினும் ஒப்பந்தம் தொடர்பான முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
உலகம் முழுவதும் 14 ஆயிரம் கார்ப்பரேட் பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக, அமேசான் அறிவித்துள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள அந்நிறுவனத்தின் துணை தலைவர் பெத் காலெட்டி, ஏஐ மூலம் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், இந்த நடவடிக்கையை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார். முக்கியமான விஷயங்களிலும், வாடிக்கையாளர்களின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளுக்காகவும் முதலீடு செய்வதற்காகவும், பணி நீக்கம் நடைபெறவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் நல்ல ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும், இது இரு நாடுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நம்புவதாக தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் தென் கொரியாவின் பூசான் நகரில் இன்று நேரடியாகச் சந்திக்கின்றனர். ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் நேரடிச் சந்திப்பு இது. இரு நாடுகளுக்கும் இடையே சமீபகாலமாக வர்த்தக பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து இருதலைவர்களும் பேச உள்ளனர். முக்கியமாக, என்விடியா நிறுவனத்தின் அதிநவீன ஏஐ சிப்களைச் சீனாவுக்கு விற்பனை செய்வதற்கான ஏற்றுமதித் தடைகள் பற்றி ஸி ஜின்பிங் உடன் பேசுவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அரிய வகை கனிமங்கள், மற்றும் விவசாயப் பொருட்கள் பற்றியும் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கு இடையே நிலவும் வர்த்தகப் போருக்கு மத்தியில் நடைபெறும் இந்தச் சந்திப்பு உலக அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.
இரண்டாம் உலகப் போரின்போது நாஜி துன்புறுத்தல்களில் தப்பிப் பிழைத்தோருக்கான நலத்திட்ட உதவியாக அடுத்த ஆண்டில், இந்திய மதிப்பீட்டின்படி ரூ.8,400 கோடி ஒதுக்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. நீண்டகால மருத்துவ மற்றும் வீட்டுத் தங்குமிடம் பராமரிப்பு தேவைப்படுகிறது என அரசு தெரிவிக்கிறது. தற்போது வயதான நிலையில் உள்ள உயிர் பிழைத்தோரில் பலர் சுகாதார பிரச்சினைகள், மனநிலை பாதிப்புகள் மற்றும் உடல் இயலாமைகள் அதிகரித்துள்ளதால் கூடுதல் பராமரிப்பு தேவையாகியுள்ளது. இந்த உதவித் தொகை, அவர்களின் மருத்துவம், வீட்டுச் சேவைகள் மற்றும் தினசரி வாழ்க்கை ஆதரவு நடவடிக்கைகளுக்காக செலவிடப்படும் என ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது.
மெலிஸா புயல் தாக்கியதில் ஜமைக்கா, ஹைதி, கியூபா ஆகிய கரீபியன் தீவு நாடுகள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. ஜமைக்காவில், மெலிஸா புயலால், கடற்கரையோர பகுதிகளில் கனமழை பொழிந்தது. இதனால் கட்டடங்கள், வீடுகள், படகுகள் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், போக்குவரத்து முடங்கி உள்ளது.
இதேபோல், ஹைதியின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. உள்நாட்டு வன்முறைகளால் இடம்பெயர்ந்துள்ள 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், இந்த புயலால் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். போர்ட் ஆவ் பிரின்ஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் ஏராளமான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கியூபாவில் பலத்த காற்றுடன் பெய்த மழையால், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை முறிந்து விழுந்தன. குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
காசாவுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் மீண்டும் தொடங்கப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தலையீட்டில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பினர் மீறியதாக, காசா மீது இஸ்ரேல் நேற்று மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டது. இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்தான், காசாவுடன் மீண்டும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தென் கொரியா சென்றுள்ள நிலையில் வட கொரியா 4 ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணைகள் அணுகுண்டுகளை போன்ற பொருளை கொண்டு சோதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இவை ஆயிரத்து 500 கிலோ மீட்டர் முதல் ஆயிரத்து 800 கிலோ மீட்டர் தொலைவு வரை சென்று தாக்கக்கூடியவை ஆகும். அமெரிக்காவும் வடகொரியாவும் எதிரும் புதிருமாக உள்ள நிலையில் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் சுதந்திரமாக வாழ்வதாக வங்கதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் மாணவர்கள் தலைமையிலான போராட்டங்கள் மற்றும் வன்முறைகளால் நாட்டைவிட்டு தப்பிச் சென்ற ஷேக் ஹசீனா, அதன் பிறகு டெல்லியில் வாழ்ந்து வருகிறார். வங்கதேசத்தில் இடைக்கால அரசு ஆட்சி செய்துவரும் நிலையில் சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டால் மீண்டும் வங்கதேசம் செல்ல விரும்புவதாக ஹசீனா கூறியுள்ளார்.
நேபாளத்தில், இமயமலையின் உயரமான பகுதியில், மிகப்பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான வடக்கு அன்னபூர்ணா பகுதியில், இந்த பனிச்சரிவு நேரிட்டுள்ளது. பெரும் இடரை முன்கூட்டியே கணித்த நேபாள பாதுகாப்புப் படையினர், துரிதமாக செயல்பட்டு, நிகழ்விடத்தில் இருந்த ஆயிரத்து 500க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை, பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும், மோசமான சூழல் காரணமாக, மலையேற்றம் உள்ளிட்ட சுற்றுலா நடவடிக்கைகளுக்கு செல்வது குறித்து வழிகாட்டுதல்களை நேபாள அரசு வெளியிட்டுள்ளது. இதனிடையே, பனிச்சரிவு நேரிட்ட திகைப்பூட்டும் காட்சிகளை, அப்பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள், படம்பிடித்துள்ளனர்.
நேபாளத்தில், இமயமலையின் உயரமான பகுதியில், மிகப்பெரிய அளவில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான வடக்கு அன்னபூர்ணா பகுதியில், இந்த பனிச்சரிவு நேரிட்டுள்ளது. பெரும் இடரை முன்கூட்டியே கணித்த நேபாள பாதுகாப்புப் படையினர், துரிதமாக செயல்பட்டு, நிகழ்விடத்தில் இருந்த ஆயிரத்து 500க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை, பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும், மோசமான சூழல் காரணமாக, மலையேற்றம் உள்ளிட்ட சுற்றுலா நடவடிக்கைகளுக்கு செல்வது குறித்து வழிகாட்டுதல்களை நேபாள அரசு வெளியிட்டுள்ளது. இதனிடையே, பனிச்சரிவு நேரிட்ட திகைப்பூட்டும் காட்சிகளை, அப்பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள், படம்பிடித்துள்ளனர்.