adelie penguins AI
உலகம்

பனிப்பாறைகள் பிங்க் நிறத்தில்.. பென்குயின்கள் செய்த விநோதம்.. நாசா சொன்ன விளக்கம்!

அண்டார்டிகாவின் பனிப்பகுதிகளில் சில இடங்களில் காணப்படும் இளஞ்சிவப்பு நிறக் கறைகள் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த வினோத நிறமாற்றத்துக்கு அடேலி பென்குயின்களின் (Adélie penguin) எச்சங்களே முக்கியக் காரணம் என நாசா தெரிவித்துள்ளது.

PT WEB

நாசா மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இணைந்து இயக்கும் Landsat-8 செயற்கைக்கோள் எடுத்த படங்களை ஆய்வு செய்தபோது, அண்டார்டிகாவின் டேஞ்சர் தீவுகள் பகுதியில் உள்ள பனிப்பாறைகளில் பரவலாக இளஞ்சிவப்பு நிறக் கறைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிறம் விண்வெளியில் இருந்தே தெளிவாகத் தெரியும் அளவுக்கு பரவலாக உள்ளது.

Krill Prawns

இதற்குப் பின்னால் பென்குயின்களின் உணவுப் பழக்கம் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அடேலி பென்குயின்கள் கடலில் வாழும் சிறிய கிரில் (krill) இறால்களை அதிகளவில் உணவாக உட்கொள்கின்றன.

இந்த கிரில், இளஞ்சிவப்பு நிறப் பாசிகளை உண்பதால் இயல்பாகவே பிங்க் நிறத்தைக் கொண்டிருக்கும். இதன் விளைவாக, பென்குயின்களின் எச்சங்களும் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. பென்குயின்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் இந்த எச்சங்கள் தொடர்ந்து குவிவதால், பனிப்பரப்பிலும் பிங்க் நிறக் கறைகள் உருவாகின்றன.

adelie penguins

Current Biology இதழில் வெளியான ஆய்வின்படி, பென்குயின்கள் கிரில் இறால்களை அதிகம் உண்ணும்போது எச்சங்களின் பிங்க் நிறம் அதிகமாகவும், மீன்களை அதிகம் உண்ணும்போது நிறம் குறைவாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், செயற்கைக்கோள் படங்கள் மூலம் இந்தப் பிங்க் நிறக் கறைகளை அடையாளம் காண்பது, அண்டார்டிகா பகுதிகளில் பென்குயின்களின் எண்ணிக்கை மற்றும் உணவுப் பழக்கங்களை கண்காணிக்க விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.