தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு, இரு நாடுகளும் மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளன. தாய்லாந்து எல்லையில் கம்போடியா தாக்குதல் நடத்தியதில் தாய்லாந்து வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். பதிலடியாக, தாய்லாந்து கம்போடியா மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த மோதல் சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து நாட்டின் எல்லைப் பகுதியான சுரீன் மாகாணத்தில் அமைந்துள்ள பிரசாத் தா மோன் தோம் கோயிலை அண்டை நாடான கம்போடியா சொந்தம் கொண்டாடி வருவதால், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட போரில் 45 பேர் பலியாகினர். இதன்பின், கடந்த அக்டோபர் மாத இறுதியில் கோலாலம்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முன்னிலையில் தாய்லாந்து - கம்போடியா இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. எனினும், அவ்வப்போது எல்லையில் சிறுசிறு மோதல்கள் நடப்பது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இரு நாடுகளும் மோதலில் ஈடுபட்டுள்ளன. நேற்று தாய்லாந்து எல்லைப் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கம்போடியா திடீரென தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இந்த தாக்குதலில் தாய்லாந்து ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பதிலடியாக இன்று அதிகாலை 5 மணியளவில் தாய்லாந்து ராணுவம் கம்போடியா மீது போர் விமானங்களை கொண்டு குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாகப் பேசிய தாய்லாந்து இராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் விந்தாய் சுவாரி, ”இந்த நடவடிக்கை கம்போடிய இராணுவ உள்கட்டமைப்பை குறிவைத்தது. இந்த நடவடிக்கை, சிப்பாயைக் கொன்ற தாக்குதலுக்கு பதிலடியாகும்” என எச்சரித்தார்.
தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல், "தாய்லாந்து ஒருபோதும் வன்முறையை விரும்பியதில்லை. தாய்லாந்து ஒருபோதும் சண்டையையோ அல்லது படையெடுப்பையோ தொடங்கவில்லை. ஆனால், அதன் இறையாண்மையை மீறுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், ”தாய்லாந்து ராணுவத்தின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தாங்கள் பதில் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை” எனவும் கம்போடியா இராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதல் தொடர்பாக கம்போடியா தகவல் தொடர்பு துறை அமைச்சர் நெத் பேகத்ரா, ”தாய்லாந்து ராணுவத்தின் தாக்குதலால் பிரேஹ் வியஹர் மற்றும் மீன்சேய் மாகாணங்களில் உள்ள பொதுமக்கள் பலியாகி உள்ளனர்” என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ”அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அமைதி ஒப்பந்தத்திற்கு மாறாக, தாய்லாந்து ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது கடும் கண்டனத்துக்கு உரியது’’ என்று கம்போடியா தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் தாய்லாந்து நாட்டு அரசு அந்த நாட்டின் எல்லைப்பகுதிகளில் வாழும் 70% பொதுமக்களை இடமாற்றம் செய்துள்ளது.
”இந்த மோதல் சர்வதேச அளவில் மிகுந்த கவலையளிப்பதாக உள்ள நிலையில், மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே போர் வெடித்தால் அதனை சரிசெய்யும் முயற்சிகள் ஆபத்தில் சிக்கக்கூடும். எனவே, தாய்லாந்து-கம்போடியா இரு நாடுகளும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும்” என மலேசியா பிரதமர் அன்வர் இப்ராகிம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெ. தமிழரசன்