இவான்கா எக்ஸ் தளம்
உலகம்

ட்ரம்பின் மகளுக்குக் குறி.. சபதமிட்ட ஈரான் பயங்கரவாதி.. சதித் திட்டம் தீட்டியது ஏன்?

இவர், நீண்டகாலமாகவே அமெரிக்காவின் கண்காணிப்பில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Prakash J

அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், தற்போது அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் போரின்போது அதிபர் டொனால்டு ட்ரம்பின் மகள் இவான்காவைக் கொலை செய்வதற்கான ஒரு திட்டம் தீட்டப்பட்டிருப்பது தற்போதைய விசாரணையில் தெரிய வந்திருப்பதுடன், அது உலக அளவில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

2020-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தின்போது, ஈரானிய இராணுவத் தளபதி காசெம் சுலைமானி ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடியாக அதிபர் ட்ரம்பின் மகள் இவான்காவைக் கொல்வதாக தாவூத் அல் சாதி என்கிற பயங்கரவாதி சபதம் செய்து இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்காக, அவர் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையிடம் (IRGC) பயிற்சி பெற்றுள்ளார். மே 15 அன்று துருக்கியில் அவர் கைது செய்யப்பட்டு, சமீபத்தில் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டபோதுதான் இத்தகைய விஷயங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இவர், நீண்டகாலமாகவே அமெரிக்காவின் கண்காணிப்பில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், IRGCயில் பயிற்சிப் பெறுவதற்காக இளம் வயது முதலே ஈரானிய இராணுவத்தில் தனித்து இயங்கியுள்ளார். இதன் காரணமாகவே அவர் IRGC-யிலும் நுழைந்துள்ளார். பின்னர், அதிலிருந்தபடியே அல்-சாதி சுலைமானியின் மிகப்பெரிய ஆதரவாளராகவும் வழிகாட்டியாகவும் மாறியுள்ளார். ஒருகட்டத்தில், அவர்களுடைய நட்பு மிகவும் நெருக்கமாகியதில், அல்-சாதி அவரை ஒரு தந்தையாகப் பார்க்கத் தொடங்கியுள்ளார். இந்தச் சூழலில்தான் அமெரிக்கத் தாக்குதல்களில் சுலைமானியின் திடீர் மரணம் அல்-சாதியை நிலைகுலையச் செய்துள்ளது. அப்போதுதான் அல்சாதிக்கு இவான்காவைக் கொல்லும் சதித்திட்டம் வடிவம் பெறத் தொடங்கியுள்ளது.

இதற்காக, ​​இவான்காவின் புளோரிடா வீட்டின் வரைபடத்தைக் அல்சாதி கையில் வைத்து சுற்றியபடியே இருந்ததாகவும் கூறப்படுகிறது. தவிர, அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற சில தாக்குதல்கள் சம்பவங்களிலும் அல்சாதி மூளையாகச் செயல்பட்டவர் என்று நம்பப்படுகிறது. மேலும், ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி-யில் மட்டுமல்லாமல், ஷியா துணை ராணுவக் குழுவான கதாயிப் ஹிஸ்புல்லாவின் செயல்பாட்டாளராகவும் அல் சாதி இருந்துள்ளார். கதாயிப் ஹிஸ்புல்லாவை அமெரிக்கா ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.