பிரபலமான வலைதளங்களில் ஒன்றாக இருக்கும் டெலிகிராமின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர், பாவெல் துரோவ். பில்லியன் பணக்காரரான இவர், தனது 13.9 பில்லியன் டாலர் சொத்து முழுவதையும் தன்னை தந்தையாகக் கொண்ட 106 குழந்தைகளுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதில் அவர் விந்தணு தானம் செய்த குழந்தைகளும் அடக்கம்.
பிரான்சின் லெ பாயிண்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், பாவெல் துரோவ் அதிகாரப்பூர்வமாக மூன்று துணைகள் மூலம் பிறந்த ஆறு குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்தாலும், 12 நாடுகளில் விந்தணு தானம் மூலம் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாக உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர், ”எனது குழந்தைகளுக்கு இடையில் எனக்கு எந்த வித்தியாசமும் இல்லை. இயற்கையாகவே கருத்தரிக்கப்பட்டவர்களும் எனது விந்தணு தானத்தால் பிறந்தவர்களும் உள்ளனர். அவர்கள் அனைவரும் எனது குழந்தைகளே. அனைவருக்கும் ஒரே மாதிரியான உரிமைகள் இருக்கும். இருப்பினும், அவர்களில் யாரும் அடுத்த 30 ஆண்டுகளுக்கு தனது செல்வத்தை அணுக முடியாது. இதுகுறித்து இப்போதே உயில் எழுதி வைக்கப் போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெலிகிராம் பதிவு ஒன்றில் அவர், “நான் பலமுறை விந்தணு தானம் செய்தேன். இதன் விளைவாக ஒரு டஜன் நாடுகளில் 100க்கும் மேற்பட்ட உயிரியல் குழந்தைகளுக்கு தந்தையானேன்" எனப் பதிவிட்டிருந்தார். தவிர, “ஆரோக்கியமான விந்தணுக்களின் பற்றாக்குறை உலகளவில் அதிகரித்து வரும் ஒரு தீவிரமான பிரச்னையாக மாறியுள்ளது. மேலும் அதைப் போக்க நான் என் பங்கைச் செய்ததில் பெருமைப்படுகிறேன். விந்தணு தானம் என்ற கருத்து மூலம் ஆரோக்கியமான ஆண்களை அதைச் செய்ய ஊக்குவிக்கவும் நான் உதவ விரும்புகிறேன். இதனால் குழந்தைகளைப் பெற போராடும் குடும்பங்கள் கூடுதல் சந்தோஷங்கள் அனுபவிக்க முடியும்” எனப் பதிவிட்டிருந்தார்.
பாவெல் துரோவின் காதல் உறவுகளைச் சுற்றி நீண்டகாலமாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவரது பெயர் பல ஆண்டுகளாக பத்திரிகையாளர் டாரியா பொண்டரென்கோ மற்றும் ஹங்கேரிய செல்வாக்கு மிக்க டயானா பாக்கோ உள்ளிட்ட பல்வேறு பெண்களுடன் தொடர்புடையது. இருப்பினும், அவர் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் ஆறு குழந்தைகளில், மூன்று குழந்தைகள் இரினா போல்கருடனான அவரது உறவின்போது பிறந்தனர் எனக் கூறப்படுகிறது.